‘வேலைக்காரன்’, ‘பணக்காரன்’, ‘கரகாட்டாக்காரன்’ என்ற டைட்டிலில் வந்த படங்கள் வெற்றியடைந்தால், அதே பாணியில் ‘…காரன்’ என டைட்டில் வைக்கிற வழக்கம் தமிழ் திரையுலகில் நிலவியதுண்டு. ’ஆடி வெள்ளி’ வெற்றி பெற்றவுடன், ‘பக்தி படங்கள் தான் இன்னிக்கு ஜெயிக்கும்’ என்று வரிசையாகப் பல படங்கள் தயாரிக்கப்பட்டதைத் திரையுலகம் கண்டிருக்கிறது. ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘வைகாசி பொறந்தாச்சு’, ’துள்ளுவதோ இளமை’ வெற்றியடைந்தபோது, அதே பாணியின் இளவட்டங்களின் காதல் களியாட்டத்தைக் காண்பிக்கப் பல இயக்குனர்கள் முண்டியடித்தனர்.
ஒரு திரைப்படம் வெற்றியடைந்தால், அதில் இருக்கிற ஒவ்வொரு அம்சங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்து அதே பாணியில் படம் எடுக்கிற வழக்கம் எல்லா திரையுலகிலும் உண்டு. ‘இப்போ இதுதான் ட்ரெண்டு’ என்று அதற்குக் காரணம் கூறுவதும் உண்டு.
அந்த வகையில் ‘பாகுபலி 1&2’, ‘கேஜிஎஃப் 1&2’, ‘விக்ரம்’, ‘ஜெயிலர்’ வெற்றிகளுக்குப் பிறகு வரலாற்றுப் புனைவுகள், பீரியட் ஆக்ஷன் கதைகள், பல்வேறு திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களை ஒன்றிணைக்கிற திரைக்கதைகளில் ஆர்வம் காட்டிப் பல ‘பான் இந்தியா’ திரைப்படங்கள் கடந்த பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்டன.
‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் பேமிலி’, ‘மெட்ராஸ் மேட்னி’, ‘தலைவன் தலைவி’ வெற்றிகளுக்குப் பிறகு ‘குடும்பப் படங்களைத்தான் ஜனங்க ரசிக்குறாங்க’ என்று பெரும்படையே கிளம்பியிருக்கிறது. அடுத்தடுத்த வாரங்களில், மாதங்களில் அவற்றைப் பிரதியெடுக்கிற முயற்சிகள் நம் முன் வைக்கப்படும்.

அந்த வகையில், இந்தியில் நீண்டகாலம் கழித்து பெருவெற்றியைப் பெற்றிருக்கிறது மோஹித் சூரி இயக்கியுள்ள ‘சையாரா’. ரொமான்ஸ் வகைமையில் அமைந்த இப்படத்தில் புதுமுகங்களான அஹான் பாண்டே, அனீத் பட்டா நாயகன் நாயகியாக நடித்திருந்தனர்.
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட நாயகி தன்னை நிச்சயம் மறந்து போவார் என்பதை அறிந்தும், அவர் மீது நாயகன் காதலை அள்ளிக் கொட்டுவதுதான் ‘சையாரா’வின் ஒருவரிக்கதை.
சுமார் ஒரு மாத காலத்தில் உலகம் முழுக்க 555 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது இப்படம். இத்தனைக்கும் இப்படம் அதிகபட்சமாகச் சுமார் 35 முதல் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாகச் சொல்லப்படுகிறது.
பட்ஜெட்டை விடப் பத்து மடங்கு லாபம் என்ற சாதனையைக் கண்டு இந்தி திரையுலகமே மலைத்துப் போயிருக்கிறது.

ஒரு படி மேலே சென்று, ‘இதை.. இதை.. இதைத்தான் எதிர்பார்த்தேன்’ என்று விளம்பரப் பட பாணியில் பேசியிருக்கிறார் இயக்குனர் கரண் ஜோஹர். குச் குச் ஹோதா ஹை, கபி அல்விதா நா கஹ்னா என்று 90ஸ் கிட்ஸ்களை அலற வைத்த ‘ரொமான்ஸ்’ படங்களைத் தந்தவர் இவர்.
”கடந்த பத்தாண்டுகளாகத் தென்னிந்திய சினிமாவில் உருவான ஆக்ஷன் படங்களைப் பார்த்து மலைத்துப் போய், அந்த இயக்குனர்களுக்கு போன் செய்து நாங்கள் (இந்தி இயக்குனர்கள்) பாராட்டி வந்தோம். அதைப் போன்றே படங்களை உருவாக்க முடியாமல் தவித்து வந்தோம். நல்ல வேளையாக, இப்போது ’சையாரா’ வந்து பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. நமக்கு என்ன வருமோ, அதைச் செய்வோம் என்று உணர்த்தியிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார் கரண் ஜோஹர்.
கூடவே, ஏற்கனவே தான் இயக்கிய காதல் படங்களைப் போன்று அடுத்த படத்தை உருவாக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
2026இல் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்குத் தான் செல்லவிருப்பதாகத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கரண் ஜோஹர் கூறியிருக்கிறார். ’பழைய, நல்ல இந்திப் படங்களுக்கே உரித்தான சிறப்பம்சங்களுடன் மீண்டும் திரையில் கதைகள் சொல்லவிருக்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கனவே ‘சையாரா’ வெற்றியால் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த கரண் ஜோகர் ரசிகர்கள், இந்த தகவல் கேட்டதும் குதூகலிப்பில் ஆழ்ந்துள்ளனர். ‘வாங்க தல வாங்க..’ என்பதாக அவரது முடிவுக்கு ஆதரவு தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்துகளை வாரியிறைத்து வருகின்றனர்.
