சென்னை சைதாப்பேட்டையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை ஒதுக்கீடு செய்வதில் சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, த.வெ.க எம்.எல்.ஏ அருள் பிரகாசம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதுதான் நடைமுறை. ஆனால், இந்த குலுக்கல் முறையில் முறைகேடு செய்து, பட்டியலின மக்களுக்குத் தனியாக ஒரு பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் விக்னேஷ் கூறுகையில், “மக்கள் மாற்றம் என்று நினைத்து இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், இப்போது எல்லோருக்கும் ஏமாற்றமாகத்தான் உள்ளது. சாதிய அடிப்படையில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுத்து நிறுத்தியிருந்தார். ஆனால், இப்போது அதை உடைத்து, ‘அவர்களுக்குச் சாதி அடிப்படையில்தான் வீடுகளைக் கொடுப்போம்’ என்று குலுக்கலைத் தொடங்கினர்.
நாங்கள் இப்பிரச்சினையை கையில் எடுப்போம் என்று தெரிந்த பிறகே குலுக்கலை ஆரம்பித்தார்கள். ஆனால், ‘ஏ’ பிளாக்கில் (A-Block) மட்டும் சாதிய அடிப்படையில் வீடுகள் கேட்டவர்களின் எண்கள் இடம்பெறவில்லை. ஒரு பட்டியலினத்தவரின் எண் கூட அதில் இல்லை. இதன் காரணமாக ‘சி’ பிளாக் (C-Block) முழுமையாக நிறைவடைந்துவிட்டது. ஏறத்தாழ 36 வீடுகளை இப்படிச் சாதிய அடிப்படையில் தனியாக ஒதுக்கியுள்ளனர். ஒட்டுமொத்தமாக ஒரு பிளாக்கையே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் ஒதுக்கி வைத்துள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய காரணத்திற்காக, த.வெ.க எம்.எல்.ஏ அருள் பிரகாசத்தின் ஆதரவாளர்கள் தன்னைத் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கறிஞர் விக்னேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பன்னெடுங்காலமாய் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஒழுகும் ஓலை குடிசைகளில் மக்கள் வசித்து வந்த நிலையை மாற்றிட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான திமுக அரசு 1970 ஆம் ஆண்டு “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!” என்கிற முழக்கத்துடன் ‘தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்’ என்கிற அமைப்பினை உருவாக்கியது.
அதன் மூலம் சென்னையில் அடர்த்தியான குடிசைகள் நிரம்பிய பகுதிகளில் வசித்த மக்களுக்கு மாற்றிடம் ஒதுக்கிவிட்டு அங்கே அனைத்து வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தந்து, அவர்களை அந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் அமர்த்தி
அழகு பார்த்தது.
இந்தத் திட்டம் சென்னையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தது. இதில் கட்டி முடிக்கப்பட்டு ஏறத்தாழ 30 அல்லது 35 ஆண்டுகள் பழமையான கட்டிடங்களை அகற்றிவிட்டு மீண்டும் அதே பகுதியில் புதிய குடியிருப்புகளை ஏற்கனவே இருந்ததைவிட அதிக வசதியுடன் நவீனமான முறையில் கட்டித் தருவதற்கு நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டார்.
அந்த ஆணையின் பெயரில் சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் கோட்டூர்புரம், வாழைத்தோப்பு, சுப்புப் பிள்ளை தோட்டம், அப்பாவு நகர் ஆகிய பகுதிகளில் பல நூறு கோடி ரூபாய் செலவில் ஏறத்தாழ 2700 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு
தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 2ஆம் நாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதிகாரிகள் துணை போவதா?
இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டக் காரணத்தால் கட்டிமுடிக்கப்பட்டு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட வீடுகள் ஒதுக்கீடுதாரர்களுக்கு வழங்குகிற பணி தடைபட்டு போயிற்று. இதற்கிடையில் புதிய ஆட்சி வந்த சூழலில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் குடியிருப்புதாரர்களுக்கு வழங்குகிற பணி குடிசை மாற்று வாரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.
குடியிருப்புதாரர்களுக்கு வீடு வழங்கப்படுகிற நேரத்தில் மாற்றுதிறனாளிகள் வயது மூத்தவர்கள் மற்றும் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்த்த மற்றவர்கள் அனைவருக்கும் பொதுக்குலுக்கல் முறையில் வீடுகள் தேர்வு செய்து தரப்படும் என்று நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் உறுதி அளித்திருந்தோம்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் “தலித் மக்கள் குடியிருக்கும் குடியிருப்புகளில் எங்களுக்கு வீடு வேண்டாம். எங்களுக்கென்று ஒரு பிளாக்கை தனியாக ஒதுக்கீடு செய்து தர வேண்டும்!” என்று ஒரு சமூகத்தினர் கேட்டு வந்தனர். அதற்கு த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஆதரவாக இருக்கிற காரணத்தினால் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் இந்த செயலுக்கு துணை போவதாக தெரிகிறது.
சாதி பாகுபாடு கூடாது என்று சமத்துவபுரங்களை கட்டித் தந்த கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டில்
சாதி பாகுபாடு காட்டுவது என்பது மிகப்பெரிய குற்றமாகும். இது உடனடியாக தடுக்கப்பட்டாக வேண்டும். அனைவருக்கும் பொதுவான நிலையில் குலுக்கல் நடைபெற்று சுமூகமாக இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் இத்தகைய போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.









