பாலியல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐஜிக்கு முருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராக பணியாற்றிய முருகனுக்கு எதிராக அவருக்குக் கீழ் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் 2018 ஆகஸ்ட் 4ஆம் தேதி பாலியல் புகார் கொடுத்தார்.
முருகனின் செய்கைகளை அந்த பெண் எஸ்.பி பல்வேறு கட்டங்களில் தவிர்த்து, விலகி, எச்சரித்து, ஒதுங்கிச் சென்றும் நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகரித்ததை அடுத்து அவர், முதல்வரின் அலுவலகம், டிஜிபி, உள்துறைச் செயலர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தார்.
“முருகன் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்காக இரவு நேரங்களில் என்னைத் தொடர்புகொண்டு பேசுவார். பின்னர் தனிப்பட்ட கேள்விகளையும் கருத்துக்களையும் தெரிவிப்பார். அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று என்னுடைய ஆடை மற்றும் ஹேர்ஸ்டைல் குறித்து கருத்து தெரிவிப்பார். என்னுடைய அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுப்பார். இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்த்தால் வேலையில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஏசிஆர் ரிப்போர்ட்டில் மார்க் குறைத்து போடுவேன் என்றும் மிரட்டுவார்” என்று புகாரில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அந்த பெண் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தமிழ்நாடு போலீஸ் குறித்த வழக்கு என்பதால் தமிழகத்தைச் சேர்ந்த சிபிசிஐடி காவல்துறையினர் விசாரிப்பது சரியாக இருக்காது என்று கூறி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானா மாநில காவல் துறைக்கு மாற்றியது சென்னை உயர் நீதிமன்றம்.
இதை எதிர்த்து முருகன் உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது
இந்தநிலையில் 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அப்போது, காவல்துறையின் மீது நம்பிக்கை வைத்து வழக்கை தமிழகத்திலேயே விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேறு மாநிலத்துக்கு மாற்ற தேவையில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்று தமிழ்நாட்டிலேயே விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
முருகன் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்ததால் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநரிடமும் தமிழக அரசிடமும் சிபிசிஐடி அனுமதி கோரியது. இதற்குக் கடந்த 2023 ஜூலை மாதம் ஆளுநர் அலுவலகமும், தமிழ்நாடு அரசும் ஒப்புதல் அளித்தன.
இதைத்தொடர்ந்து, 2023 செப்டம்பர் மாதம் சிபிசிஐடி போலீசார் 112 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை உரிய ஆவணங்களுடன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அந்த குற்றப்பத்திரிகை நகல் முருகனுக்கு வழங்கப்பட்டு, இவ்வழக்கு சைதாப்பேட்டை 11ஆவது மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு (committal case) விசாரணை நடந்து வருகிறது.
இந்தசூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கீழமை நீதிமன்றத்தில் நடந்து வரும் தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியிருந்தார். கடந்த வாரம் இதை விசாரித்த நீதிபதி சுந்தர்மோகன், முருகன் மனுவை தள்ளுபடி செய்து, கீழமை நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டார்.
இந்நிலையில் பாலியல் வழக்கில் (UNDER ACT SECTION IPc 1860, 332,354, 354 a(2), 354 a(3) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் – 2002) சைதாப்பேட்டை 11ஆவது மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முருகனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 22) வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜராகாததால் ஓய்வு பெற்ற ஐஜி முருகனுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிபதி சுல்தான் உத்தரவு பிறப்பித்தார்.
தொடர்ந்து வழக்கை 2025 ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னதாக மற்றொரு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
“அதே பாலியல் குற்றச்சாட்டு முருகன் மீது இருந்தும் தனது அதிகார பலத்தையும், அரசியல் ரீதியான தொடர்பையும் பயன்படுத்தி வழக்கை துரிதமாக நடத்தவிடாமல் 7 வருடமாக கால தாமதம் செய்து வந்தார். பொதுவாக ஒரு அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால் பதவி உயர்வு கிடைக்காது. அவர் ஓய்வு பெறும் நேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்படுவார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெண் ஐபிஎஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். ஆனால் சஸ்பெண்ட் செய்யப்படாமல் முருகன் பணி ஓய்வு பெற்றார்” என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
டிஜிட்டல் திண்ணை: அதானி விவகாரம்… திமுக எம்பிக்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ் என்ன?
அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு!