போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மனைவி அமீனாவிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மே 20) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகியான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இவர் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஜாபர் சாதிக் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புடைய இடங்கள், இயக்குநர் அமீருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, இயக்குநர் அமீருக்கு, அமலாக்கத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மன் தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமீர் ஆஜரான நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக் மனைவி அமீனா இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
அதன்படி, இன்று பிற்பகல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமீனா ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விசாரணையில் பெறப்படும் வாக்குமூலத்தை அதிகாரிகள் வீடியோ பதிவு செய்து வருகின்றனர். மேலும், ஜாபர் சாதிக்கின் சொத்து ஆவணங்கள் மற்றும் வங்கி தொடர்பான ஆவணங்கள் என கடந்த 10 வருடங்களாக அவர் தொடர்புடைய ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஜாபர் சாதிக் சினிமா துறையில் எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்பது குறித்தும் அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
