சிவ சக்தி என்பது கடவுள் பெயர் கிடையாது. சந்திரயான் 3 நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயரிட்டதை அங்கீகாரமாக கருதுகிறேன் என சத்குரு தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தரையிறங்கியது. இதன்மூலம் நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்ற பெருமையும் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையும் இந்தியா படைத்துள்ளது.
இந்தநிலையில் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு சிவ சக்தி முனை என்றும் சந்திரயான் 2 லேண்டர் மோதி விபத்துக்குள்ளான பகுதிக்கு திரங்கா முனை என்றும் பிரதமர் மோடி பெயரிட்டுள்ளார்.
நிலவின் பகுதிகளுக்கு பிரதமர் மோடி பெயரிட்டது மதச்சாயம் பூசுவது போன்று உள்ளது என்றும் 1919-ஆம் ஆண்டு சர்வதேச வானியல் கழகம் அமைக்கப்பட்ட பின்னர் அக்கழகத்தின் விதிப்படி தான் பெயர் வைக்க வேண்டும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் “நிலவில் விண்கலம் தரையிறங்கும் இடத்திற்கு பெயரிட இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. நிலவுக்கு பயணம் செய்யும் நாடுகள் பின்பற்றும் பாரம்பரியம் இது” என இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய இடத்திற்குச் சிவசக்தி என்று பெயரிட்டதை அங்கீகாரமாக கருதுகிறேன் என்று சத்குரு தெரிவித்துள்ளார்.
சத்குரு மாணவர்களுடன் கலந்துரையாடுகையில், மாணவர் ஒருவர் அவரிடம் “நிலவுக்கு குறிப்பிட்ட மதம் கலாச்சாரத்தின் பெயரை வைப்பது சரியா?” என்று கேள்வி எழுப்பியினார்.
இதற்கு பதிலளித்த சத்குரு, “அப்போலோ, மெர்க்குரி, லூனா, நெப்ட்யூன், சாடர்ன், வீனஸ், இது எல்லாம் கிரேக்க கடவுளின் பெயர்கள். இந்த கோள்கள் எல்லாம் கிரேக்கத்திற்கு சொந்தமானது என்று அர்த்தமா?
எப்படியோ நாம் நிலவில் தரையிறங்கிவிட்டோம். இதனால் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். சிவ சக்தி என்பது கடவுள் பெயர் கிடையாது. நாம் இரண்டு அடிப்படை சக்திகளை பற்றி புரிந்துகொள்ள வேண்டும். கிளாக் வைஸ், அண்டி கிளாக் வைஸ், ஆண்பால், பெண்பால். உடல் சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் ஒருவித சுழற்சியால் நடைபெறுகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்று நவீன விஞ்ஞானம் இதனை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிறுவியுள்ளது. இதனை நாம் சிவசக்தி என்று அழைக்கிறோம். இது மிகவும் அற்புதமானது.
நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு ஏ, பி என்று பெயர் வைத்திருந்தால். ஏன் ஆங்கிலத்தில் பெயர் வைத்தீர்கள். அ அல்லது ஆ என்று தமிழில் பெயர் வைத்திருக்கலாமே என்று சிலர் கூறுவார்கள். இது ஒரு வேடிக்கையான விவாதம். பரிணாம உச்சத்தை அடையும் உணர்வின் அடிப்படையில் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயர் வைத்தது முக்கியமான அங்கீகாரமாக கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் செந்தில் பாலாஜி
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!