சிறப்புக் கட்டுரை : பொறுப்பு ஏறஏற, பிரஷர் ஏறுகிறதா?

Published On:

| By Kavi

சத்குரு

ADVERTISEMENT

இன்று எல்லா, இடங்களிலும் பரவலாக பேசப்படும் ஒரு விஷயம் ‘மனஅழுத்த நிர்வாகம்’. ஒருசில வருடங்களுக்கு முன், முதன்முறையாக நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, செல்லும் இடமெல்லாம் ‘மனஅழுத்த நிர்வாகம்‘ பற்றி காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மனஅழுத்தத்தை ஏன் நிர்வகிக்க வேண்டும் என்று எனக்கு குழப்பமாக இருந்தது. தொழில், வரவுசெலவு, குடும்பம், சொத்து என பலவற்றை நீங்கள் நிர்வாகம் செய்ய வேண்டும்தான். அதில் எனக்கு குழப்பம் இல்லை. ஆனால், மனஅழுத்தத்தை ஏன் நிர்வகிக்க வேண்டும் என்பது மட்டும் எனக்குப் புரியாத புதிராய் இருந்தது.

உலகில் வாழ்ந்தாலே மனஅழுத்தத்துடன் தான் வாழமுடியும், அதைத் தவிர்க்க வழியே இல்லை என்ற முடிவிற்கு அவர்கள் வந்துவிட்டனர் போலும். அதனால்தான் தவிர்க்கமுடியாத இந்த மனஅழுத்தத்தை சாமர்த்தியமாக கையாள்வது எப்படி என்று ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருவருக்கு மன அழுத்தம் வருவது அவர் செய்யும் செயல்களால் அல்ல. அவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளை அவரால் சமாளிக்க முடியாமல் போவதால், அவரே உருவாக்கிக் கொள்ளும் உளைச்சல் இது. தன் உடல், மனம், உணர்ச்சிகள், சக்திநிலையை நன்னிலையில் நிர்வகித்தால், சூழ்நிலை சாதகமாக இல்லாவிடினும், நீங்கள் உளைச்சல் உருவாக்கி அவதியுறத் தேவையிருக்காது.

ADVERTISEMENT

ஒவ்வொருவரும் அவர்களது வேலை மன அழுத்தம் உண்டாக்கவல்லது என்றே நம்புகிறார்கள்.

சற்றே கவனித்துப் பார்த்தால், எந்த வேலையுமே மனஅழுத்தம் தரக்கூடியதல்ல. செய்யவேண்டிய வேலையை திறம்பட செய்ய முடியாமல், நீங்களே உருவாக்கிக் கொள்ளும் உளைச்சல் அது. ஒரு வேலையை திறம்பட செய்யமுடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமானது, உங்கள் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்திநிலைகளின் மீது உங்களுக்கு கட்டுப்பாடு இல்லாததுதான். இவற்றை சரியாக நிர்வகித்தாலே எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உங்களுக்கு மன அழுத்தம் நேராது.

ADVERTISEMENT

மனித வாழ்வு அழகு பெறுவது செயல்களை கச்சிதமாக செய்து முடிப்பதால் அல்ல. எந்தச் செயலை செய்தாலும், அதை இதயப்பூர்வமாக, முழு ஈடுபாட்டுடன் செய்வதால்தான் அது அழகு பெறுகிறது. நாம் என்ன செய்கிறோம் என்பது ஒரு விஷயமே அல்ல. நாம் தரையைத் துடைக்கிறோமோ, தேசத்தை நிர்வகிக்கிறோமோ எந்தச் செயலாக வேண்டுமானாலும் இருக்கட்டும். செய்யும் அந்தச் செயலை இதயப்பூர்வமாக, முழு ஈடுபாட்டுடன் செய்தால், வேலை செய்வதே மிக அழகான ஒரு அனுபவமாக இருக்கும். வாழ்க்கை அழகு பெறுவது நாம் சம்பாதிக்கும் பொருட்களினால் அல்ல, வாழ்வின் ஆழத்தில் உள்ளது.

தன் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்திநிலையை, அதாவது, தன் உள்நிலையை சரியாக நிர்வகிக்க தெரியாதவருக்குத்தான் மனஅழுத்தம் வருகிறது. இப்படி தன் உள்நிலையையே சரியாக நிர்வகிக்கத் தெரியாதவர், வெளிசூழ்நிலையை சரியாக நிர்வகிப்பது தற்செயலாய் நடந்தால்தான் உண்டு.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…

சிறப்புக் கட்டுரை : திருமணம் என்பது சிக்கலா?

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share