மும்பை வான்கடே மைதானத்தில் சச்சினின் முழு உருவச் சிலை விரைவில் திறக்கப்பட உள்ளது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் அரிய பொக்கிஷமாக கருதப்படுபவர் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். 1989ஆம் ஆண்டு தனது 16வயதில் இந்திய அணிக்காக களமிறங்கிய அவர் கால் நூற்றாண்டு காலம் தனது ஆதிக்கத்தை கிரிக்கெட்டில் நிலைநாட்டினார்.
சச்சின் இந்தியாவுக்காக 200டெஸ்ட் போட்டிகள், 463ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (100) மற்றும் அதிக ரன்கள் (34,357)குவித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இப்படி யாரும் எளிதில் சாதிக்க முடியாத பல்வேறு சாதனைகளை படைத்துள்ள சச்சின், கடந்த 2013ம்ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.

கடந்த 2014ம் ஆண்டு இந்திய அரசு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை சச்சினுக்கு வழங்கி கெளரவித்தது.
இந்நிலையில் சச்சினின் 50வது பிறந்தநாளை(ஏப்ரல் 24) முன்னிட்டு, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 10ஆண்டுகள் ஆன நிலையில் அவரை கவுரவிக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி சச்சின் தனது கடைசி டெஸ்ட் போட்டி விளையாடிய மும்பை வான்கடே மைதானத்தில் அவருக்கு முழுஉருவச்சிலை நிறுவப்பட உள்ளது.
இந்த சிலையானது ஏப்ரல் 23ம்தேதி அல்லது இந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் 50ஓவர் உலகக் கோப்பையின்போது திறக்கப்படும் என கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (எம்சிஏ) தலைவர் அமோல் காலே கூறுகையில், “வான்கடே மைதானத்தில் இது முதல் சிலையாக இருக்கும். அதை எந்த இடத்தில் வைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை.
பாரத ரத்னா விருது பெற்ற சச்சின் கிரிக்கெட்டுக்காக என்ன செய்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு முழு உருவச்சிலை வைக்க 3வாரங்களுக்கு முன்பே அவரிடம் பேசி ஒப்புதல் பெறப்பட்டது.
அவருக்கு 50வயதாகும் போது, சிலை இங்கு திறக்கப்பட்டால், அது எம்.சி.ஏ. சார்பில் சச்சினுக்கு அளிக்கப்படும் கெளரவமாக வரலாற்றில் இருக்கும்”என்று காலே கூறினார்.
ஏற்கெனவே வான்கடேவில் உள்ள ஒரு ஸ்டாண்டுக்கு டெண்டுல்கர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு முன்பாக முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் மற்றும் திலீப் வெங்சர்க்கார் ஆகியோரின் பெயர்களும் தலா ஒரு ஸ்டாண்டுக்கு வழங்கப்பட்டன.

இந்தியாவில் உள்ள மைதானங்களில் கிரிக்கெட் வீரர்களின் முழுஉருவச்சிலைகள் அதிகம் இல்லை.
நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், ஆந்திராவில் உள்ள வி.டி.சி.ஏ ஸ்டேடியம் மற்றும் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியம் ஆகியவற்றில் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவின் சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய ஜாம்பவான் முழு உருவச்சிலையானது விரைவில் அவரது முன்னிலையிலேயே திறக்கப்பட உள்ளது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மகளிர் இலவச பேருந்து திட்டத்தால் 236 கோடி பயணங்கள்: முதல்வர் ஸ்டாலின்
