சபரிமலையில் 41 நாட்கள் மண்டல காலம் நேற்றுடன் நிறைவடைந்து மண்டல பூஜை நடைபெற்று நடை சாத்தப்பட்டது. மகர விளக்கு பூஜைக்காக நடை மீண்டும் டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்படுகிறது.
சபரிமலையில் இந்தாண்டு மண்டல பூஜைகள் நவம்பர் 17-ம் தேதி தொடங்கியது. முந்தைய வருடங்களை போலவே இந்த வருடமும் மண்டல காலம் தொடங்கியவுடன் சபரிமலைக்கு பக்தர்கள் படையெடுக்க தொடங்கினர்.
தொடக்க நாட்களில் தினமும் சராசரியாக 60,000 முதல் 75,000 வரை பக்தர்கள் வந்தனர். வார இறுதி நாட்களில் ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.
அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதனால் பக்தர்கள் 10 முதல் 16 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், கழிப்பிடம் உட்பட எந்த வசதியும் செய்து தரப்படாததால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.
இதையடுத்து கேரள உயர் நீதிமன்றம் தலையிட்டு பக்தர்களுக்கு உடனடியாக வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நேற்று காலை 10.30 மணிக்கு நடந்தது.
முன்னதாக ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட தங்க அங்கி சன்னிதானத்தை அடைந்தது. பின்னர் தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
மண்டல பூஜை முடிவடைந்த நிலையில் நேற்று (டிசம்பர் 27) இரவு 11 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. மகர விளக்கு பூஜை ஜனவரி 15-ம் தேதி நடைபெறுகிறது. ஜனவரி 20 வரை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுற்றுலா பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தாஜ்மகால்!
இந்திய ராணுவப் பொருட்கள் உற்பத்திக்கு ரஷ்யா ஆதரவு!