சபரிமலை: அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்… ரூ.57 கோடி வருவாய்!

Published On:

| By Balaji

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் சூழலில் ரூ.57 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் அப்பம், அரவணை பிரசாத விற்பனை 27 கோடி ரூபாயைத் தாண்டி இருப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் அறிவித்துள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டு தரிசனத்துக்காக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. தற்போது தினசரி 60,000 பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயில் சன்னிதானத்தில் தங்கவும், பம்பையில் புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதனால் பக்தர்களின் வருகை சபரிமலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாதங்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்தது முதல் தற்போது வரை அப்பம், அரவணை விற்பனை மூலம் 27 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்திருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியச் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் வாரியார் தெரிவித்துள்ளார்.

பக்தர்களின் வருகைக்கேற்ப பிரசாதம் தடையின்றி கிடைக்க அரவணை, அப்பம் தயாரிக்கும் பணிகளும் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் 19ஆம் தேதி வரை 8 லட்சத்து 11,235 பக்தர்கள் வந்துள்ளனர். இதன்மூலம் கோயிலுக்கு ரூ.57 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

சபரிமலைக்குக் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இனி வரும் நாட்களில் வருவாய் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

**-ராஜ்**

ADVERTISEMENT

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share