சகாய ராஜ், ஆரோக்கிய ராஜ் என்று இரண்டு சகோதரர்கள், அவர்களது தங்கை ஸ்டெல்லா (கவிதா சுரேஷ்) இந்து இளைஞன் அமரனை காதலிக்க, ஆரம்பத்தில் மறுக்கும் சகோதரர்கள் பின்னர் தங்கைக்காக வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஸ்டெல்லாவுக்கு மகன் பிறந்த நிலையில் ஒரு நாள் சகாயராஜ், ஆரோக்யராஜ் போன அமரன் செத்து விடுகிறான் . வளர்ந்து இளைஞன் ஆகும் ஸ்டெல்லாவின் மகன் ஜூட் மாரிமுத்து (உதய் தீப் ), தனது அப்பா அமரனை தாய் மாமாக்கள் தான் கொன்று விட்டதாக நம்புகிறான். ஒரு முறை குடிபோதையில் ஆரோக்கியராஜை ஜூட் மாரிமுத்து அடித்தும் இருக்கிறான்.
ஆரோக்கிய ராஜ் மகளும் ஜூட் மாரிமுத்துவும் காதலிக்கிறார்கள். ஆனால் ஜூட் மாரிமுத்துவை வெறுக்கும் ஆரோக்கியராஜ் அதற்கு தடையாக இருக்கிறான்.
இந்த நிலையில் ஆரோக்கியராஜ் விபத்தில் செத்துப் போகிறான்.
அவனது உடல் வீட்டில் வைக்கப்பட்டு இருக்க, சகாயராஜ், ஆரோக்கியராஜ் , காதலி ஆகியோருக்கு ஜூட் மாரிமுத்து மேல் சந்தேகம். எனினும் ஆதாரம் இல்லாத காரணத்தால் அமைதியாக இருக்கிறார்கள்.
இரவில் தூங்காமல் பிணத்தைப் பார்த்துக் கொள்ளும் வேலையை எல்லோரும் சேர்ந்து ஜூட் மாரிமுத்துவிடம் கொடுக்கிறார்கள் துணையாக சகாயராஜின் மகனும் இருக்கிறான். ஒரு நிலையில் சகாயராஜின் மகன் வெளியே போவதாக சொல்லி விட்டு கஞ்சா அடிக்கப் போய் விட, ஒரு போலீஸ்காரர் சந்தேகக் கேசில் அவனை விரட்ட அவன் தப்பித்து விடுகிறான்.
தானும் கண் அசந்து விட்ட நிலையில், ஜூட் மாரிமுத்து கண் விழித்துப் பார்த்தால் ஆரோக்கியராஜின் பிணத்தைக் காணவில்லை.
ஆரோக்கியராஜின் நண்பரான ஒரு போலீஸ் அதிகாரி (ஆதேஷ் பாலா) விசாரிக்க வருகிறார்.
ஜூட் மாரிமுத்து, ஆரோக்கியராஜின் மகன் ஆரோக்கியராஜின் மகள், என்று பல பேர் மீது அவர் சந்தேகப்படுகிறார்.
சகாயராஜ் இறந்தது எப்படி? கொலை எனில் செய்தது யார்? எதுவாக இருப்பினும் பிணம் என்ன ஆனது? இவற்றில் ஜூட் மாரிமுத்துவின் பங்கு என்ன என்பதே,
ஆன்டனி அஜித் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆன்டனி அஜித் தயாரித்து எழுதி இயக்க, உதய தீப் , ஆதேஷ் பாலா, ராட்சசன் யாசர்,மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே சேஷாத்திரி ஆகியோர் நடிப்பில் வந்திருக்கும் படம் “சாவீ” (எழுத்துப் பிழை அல்ல) “சாவீ” (சாவு வீடு என்பதன் சுருக்கம்).
(சாவு வீடு என்று பெயருக்கு தியேட்டர் தர முடியாது என்று தியேட்டர் உரிமையாளர்கள் மறுக்க சாவீ என்று பெயரை மாற்றி இருக்கிறார்கள். யாரை நோவது என்றே தெரியவில்லை.)
நல்ல கதைதான்…. சில இடங்களில் வசனம், ‘ அட’ போட வைக்கிறது. பாராட்டுகள்.
மிக எளிமையாக அலட்டிக் கொள்ளாத சோதா மேக்கிங்கில் படம் எடுத்து இருக்கிறார்கள். நடித்தவர்கள் உள்ளிட்ட மொத்த யூனிட்டுமே அப்படித்தான் விட்டேத்தியாக நடித்து இருக்கிறார்கள்.
கணவனை அண்ணன்கள்தான் கொன்றார்கள் என்ற தனது மகனின் கருத்தில் ஜூட் மாரிமுத்துவின் அம்மாவின் நிலைப்பாடு என்ன? சொல்லல.
ஆரோக்கியராஜை ஜூட் மாரிமுத்துதான் கொன்று இருப்பான் என்று நம்பும் சகாயராஜ் உள்ளிட்ட உறவினர்கள் ஆரோக்கியராஜின் உடலை பார்த்துக் கொள்ளும் வேலையை ஜூட் மாரிமுத்துவிடம் கொடுத்தது ஏன்? தெரியல.
ஒருவேளை அப்படி பார்த்துக் கொள்ள வைத்து ஜூட் மாரிமுத்துவை வேவு பார்க்கப் போகிறார்களாக இருக்கும்.என்று படம் பார்க்கும்போது நமக்குத் தோன்றும் சிந்தனை கூட, படம் எடுத்து முடிக்கும் வரை படக் குழுவினருக்கு வரல.
ஆரோக்கியராஜ் இறந்த சில நாட்களிலேயே அவரது அண்ணன் சகாயராஜும் இறக்க, அவர் இறந்த விதத்தை வீடியோவில் பார்த்து ஆரோக்கியராஜின் மனைவி, மகள், ஜூட் மாரிமுத்துவின் அம்மா எல்லோரும்…. என்னமோ வடிவேலுவின் பீக் டைம் காமெடியைப் பார்த்து சிரிப்பது போல விழுந்து புரண்டு சிரிப்பது எப்படி? புரியல.
படத்தை காமெடியாக சொல்வதா சீரியஸா சொல்வதா என்று குழம்பி சுமாரான கதையை திரைக்கதையில் சொதப்பி வைத்து இருப்பது ஏன்? விளங்கல.
ஆரோக்கியராஜ் ஒரு படத்தை டைரக்ட் செய்கிறார் என்று சொல்வது இந்தப் படத்துக்கு எந்த வகையிலும் பலன் தரவில்லை என்பதை படக்குழு உணரல.
ஏதோ ஒரு மின்ட் சிகரெட் அதை புகைத்ததால்தான் பலரும் மனம் குழம்பி விபரீதமாக நடந்து கொள்கிறார்கள் என்கிறார்கள். அப்புறம் கஞ்சா காரணம் என்கிறார்கள். தெளிவில்லை.
இன்ஸ்பெக்டராக வரும் ஆதேஷ் பாலா மட்டும் கவனிக்க வைக்கிறார். பலனில்ல.
சாவீ என்கிற சாவு வீடு … தலை முழுகணும், வீட்டுக்கு போனதும்!
— ராஜ திருமகன்
