ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியை இன்று (மே 13) அறிவித்துள்ளது தென்னாப்பிரிக்கா அணி. SA player tamil origin will play aganist aus at wtc final!
வரும் ஜூன் 11ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள பழமையான லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி தொடங்குகிறது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை இன்று அறிவித்துள்ளது.
அதன்படி பவுமா அணியின் கேப்டனாக வழிநடத்த உள்ளார். அவரது தலைமையில் WTC தரவரிசையில் 69.44 புள்ளி சதவீதத்துடன் முதலிடம் பிடித்து முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது தென்னாப்பிரிக்கா அணி.

முன்னதாக கடந்த டிசம்பரில் பாகிஸ்தானில் எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா 2-0 என்ற டெஸ்ட் கணக்கில் தொடரை வென்று அசத்தியது.
அப்போதிருந்த அணியில் இருந்து இளம் வீரர் குவேனா மபாகா மற்றும் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன் மேத்யூ பிரீட்ஸ்கே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக இடுப்பு காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக களமிறங்க முடியாத வலது கை வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி, தற்போது குணமடைந்துள்ள நிலையில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே போன்று வேகப்பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனான ஆல்ரவுண்டர் கார்பின் போஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தவிர அணியின் முக்கிய வீரர்களாக, டோனி டி சோர்சி, ரியான் ரிக்கல்டன், ஏய்டன் மார்க்ராம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம் ஆகியோர் உள்ளனர்.
வேகப்பந்துவீச்சில் ககிசோ ரபாடா, நிகிடி, டேன் பேட்டர்சன் மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் தாக்குதல் தொடுக்க உள்ளனர்.
சுழற்பந்துவீச்சை பொறுத்தவரை, இடது கை சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகவும், செனுரான் முத்துசாமி மாற்று வீரராகவும் இருப்பார் என கருதப்படுகிறது.

அதேவேளையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மாற்று வீரரான செனுரான் முத்துசாமியை போட்டியில் களமிறக்கவும் தென்னாப்பிரிக்கா அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டது முத்துசாமியின் குடும்பம்.
இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 252 விக்கெட்டுகளையும், எட்டு சதங்கள் உட்பட பேட் மூலம் 4873 ரன்களையும் எடுத்துள்ளார் முத்துசாமி.
அதன்பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில் ஏழு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா அணி விவரம்!
டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி சோர்சி, ஏய்டன் மார்க்ராம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், லுங்கி நிகிடி, கார்பின் போஸ், கைல் வெர்ரெய்ன் (விக்கெட் கீப்பர்), டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரான் முத்துசாமி, டேன் பேட்டர்சன்.
