பிரதமர் மோடி இன்று (ஜனவரி 23) தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெறுகிறது.
இன்று மதியம் 3.00 மணி முதல் 4.15 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்த மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் பொது கூட்டத்துக்கு வந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் . பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம், தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற மக்கள் விரோத திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தொடக்கம்” என்றார்.
தொடந்து பொதுவெளியில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க போகிறீர்கள், இந்த சந்திப்பு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், “சின்ன பிள்ளைதனமாக கேட்காதீர்கள். என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் அமமுக இணைந்தபோதே, எங்களுக்குள் இருந்த பங்காளி சண்டைகளை மறந்துவிட்டு, அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன். விட்டு கொடுத்துவிட்டு வந்துக்கிறேன் என்று தெரிவித்திருந்தேன். இந்த கூட்டணிக்கு வருவதற்கு முன் எங்களது நிர்வாகிகளுடன் பலமுறை பேசிவிட்டுதான் வந்தேன். நான் இந்த முடிவை எடுத்த பிறகு எங்கள் கட்சியை சேர்ந்த 99 சதவிகிதம் பேர் திருப்தியாக இருக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து கூட்டத்துக்கு சென்ற டிடிவி தினகரனை நேருக்கு நேர் சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். இருவரும் பேசிக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
