கோவை தெற்கு தொகுதியில் உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா அல்லது இறக்குமதி செய்யப்பட்ட வெளியூர் வேட்பாளர்கள் வேண்டுமா என அம்மன் அர்ஜுனனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக அம்மன் அர்ஜுனன் போட்டியிட உள்ளார். அதேபோல் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களம் இறங்கியுள்ளார். இதனால் கோவை தெற்கு தொகுதி அரசியலில் உற்று நோக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 1) அம்மன் அர்ஜுனனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட எஸ்.பி. வேலுமணி பேசுகையில்,“கோவையில் அதிகமான ஸ்மார்ட் சிட்டி பணிகள், மேம்பாலங்கள் ஆகியவை அதிமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டன.
அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஆனால் திமுகவினர் அந்த வீடுகளை விலைக்கு விற்று வருகிறார்கள்.
அம்மன் அர்ஜுனன் நம்மில் ஒருவர். யார் எப்போது கூப்பிட்டாலும் உடனடியாக வருபவர். ஆனால் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அனைவரும் இறக்குமதி செய்யப்பட்ட வெளியூர் வேட்பாளர்கள்” என்று விமர்சித்தார்.
மேலும், “1000 ரூபாய் கொடுக்கிறோம், 3000 ரூபாய் கொடுக்கிறோம் என்று ஏமாற்றுகிறார்கள். 28 மாதங்கள் கழித்து மகளிர் உரிமைத் தொகை கொடுத்தார்கள். அப்படியென்றால் 28,000 ரூபாய் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா?” எனக் கேள்வி எழுப்பினார்.
“இந்த ஐந்து வருடத்தில் மின்சாரக் கட்டணம், சொத்து வரி எல்லாம் எவ்வளவு செலுத்தியுள்ளீர்கள்? மளிகைப் பொருட்கள் எவ்வளவு வாங்கினீர்கள் என்று கணக்கு போட்டுப் பாருங்கள். இந்த ஐந்து வருடத்தில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் திமுக 5 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை பிடுங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து லட்சம் ரூபாய் மீதம் இருந்திருக்கும்” என்றார்.
கோவையில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளதாகவும், கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறுவதாகவும் வேலுமணி குற்றம்சாட்டினார்.
“சரவணம்பட்டி பகுதியில் ஒரு கல்லூரி மாணவியை எரித்துக் கொன்றார்கள். காவல்துறையினர் உடனடியாகச் சென்று உடலை டிஸ்போஸ் செய்தார்கள். அதைப் பத்திரிகையாளர்களுக்குக் கூட தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.
மேலும், “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது மோடியும் அமித் ஷாவும் பல்வேறு திட்டங்களைத் தந்தார்கள். அமெரிக்கா-ஈரான் போரால் மற்ற நாடுகளுக்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, இந்தியாவில் அப்படி இல்லை. பிரதமர் மோடி ஐந்து எண்ணெய் கப்பல்களை அழகாகக் கொண்டு வந்து இறக்கினார்” என்றார்.
“தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து ஓட்டு வாங்கிச் செல்லும் வெளியூர் வேட்பாளர்கள் நமக்கு வேண்டுமா? அல்லது உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கோவை தெற்கு தொகுதியில் பல்வேறு திட்டங்கள் வருவதற்கு அம்மன் அர்ஜுனன்தான் காரணம்” என்றும் வேலுமணி தெரிவித்தார்.
“அதிமுக ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்திற்கு விடிவு காலம் வரும்” என்று கூறிய அவர், “நீங்கள் என்னை எங்கும் தேட வேண்டாம். ஒரு போன் கால் செய்தால் வீட்டு வாசலில் வந்து நிற்பேன்” என்றார்.
