ADVERTISEMENT

எஸ்.பி.பி – என்றென்றும் இளமை ததும்பும் குரல்!

Published On:

| By Kavi

உதயசங்கரன் பாடகலிங்கம்

ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்பிரமணியம். யார் இது என்று யோசிக்கிறீர்களா? நமது எஸ்.பி.பியின் முழுப்பெயர் தான் இது. அவரது பெயரை உச்சரிக்கத்தான் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஆனால், அவர் பாடிய அனைத்து பாடல்களும் எளிதாக நம் காதுகளில் புகுந்து, மூளைக்குள் ஏறி, ஒரு கொண்டாட்டத்தை நிகழ்த்தி, அதனை உடல் முழுவதும் பரவச் செய்து, இறுதியாக நமது நாவிலும் அதே பாடல் புரளுமாறு செய்யும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

என்ன, காதுகளில் ரீங்காரமிடும் அந்த தேனிசைக்கு ஒப்பாக நமது குரல் இருக்காது என்பதைத் தவிர அந்த அனுபவத்தைச் சிலாகிப்பதில் வேறெந்தச் சங்கடமும் இல்லை.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்த தினம் ஜுன் 4, 1946. அப்படிப் பார்த்தால், இன்று அவரது 78வது பிறந்தநாள். அவரது பூதவுடல் நம்மை விட்டுச் சென்று நான்காண்டுகள் ஆகின்றன. ஆனால், அவர் விட்டுச் சென்ற பாடல்கள் காற்றின் வழியே ஒவ்வொரு நொடியும் நம்மை வந்தடைந்து கொண்டே இருக்கின்றன. எந்த ராகத்தில், என்ன ரசத்தில் அந்த பாடல் அமைந்தாலும், எந்தக் காலத்தில் அது வெளியாகியிருந்தாலும், அந்தக் குரலின் அடியாழத்தில் இளமை ஒரு நதியாக அலையோடிக் கொண்டிருக்கும். இளமை உடல் சார்ந்ததல்ல; மனம் சார்ந்தது என்றெண்ணும் மக்களுக்கு மட்டுமே கலைத்தாய் அப்படிப்பட்ட வரத்தினைத் தருவாள்!

ADVERTISEMENT

என்றென்றும் இளமை!

’ஆயிரம் நிலவே வா’ என்று எம்ஜிஆர் அழைத்தாலும், ’பொட்டு வைத்த முகமோ’ என்று சிவாஜி சிலாகித்தாலும், ‘இயற்கை எனும் இளையகன்னி’ என்று ஜெமினி வர்ணித்தாலும், அவர்களது குரலாக வெளிப்பட்ட எஸ்.பி.பியிடம் இளமைக்குமிழ்கள் கொப்பளிப்பது தெரியும்.

ADVERTISEMENT

அவர்களது அடுத்த தலைமுறைக்கும் கூட பெரிதாகச் சிக்கல் சிடுங்கல் இல்லாமல் பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ‘உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்’ என்று அன்றைய இளசுகளின் இளமைத்தாகத்திற்குத் தீனி போடுவார். இளமைச் சூட்டை மழைத்துளி கொண்டு வளர்த்தெடுக்கும் வகையில் ‘தேன் சிந்துதே வானம்’ என்ற பாடலைத் தந்திருப்பார்.

 

சிட்டுக்குருவி படத்தில் வரும் ‘என் கண்மணி உன் காதலன்’ பாடலில் இளமையின் துள்ளலைத் தன் குரல்வழி வெளிப்படுத்தியிருப்பார். சரி, இப்படியே போனால் ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ என்றாகிவிடும் என்ற எண்ணத்தில் ‘சின்னப்புறா ஒன்று’ என்று மெலடியில் உருகுவார். ’சம்சாரம் என்பது வீணை’, ‘வான் நிலா நிலா அல்ல’, ’இளமை எனும் பூங்காற்று’, ’ராகங்கள் பதினாறு’ என்று பாடல் பாடும்போது ‘மிமிக்ரி’ செய்யும் மிகச்சில பேர்களில் எஸ்.பி.பியும் ஒருவர். பாடலுக்கு இடையே சிரிப்பது, கெக்கலிப்பது, கொக்கரிப்பது என்று அவர் வழக்கமாகச் செய்யும் சேட்டைகள் இதில் சேராது. திரையில் வருபவர்களுக்கு ஏற்பத் தனது குரலும் தென்படுமாறு அவர் செய்யும் மாயாஜாலத்தை மட்டுமே நாம் விலாவாரியாகச் சிலாகிக்க முடியும். அதுதான் எஸ்.பி.பியின் தனித்துவம்.

வித்தியாசம் கிடையாது!

புதிதாக ஒரு இசையமைப்பாளர் அறிமுகமாகிறார் என்றால், அவரது படத்தில் கண்டிப்பாக எஸ்.பி.பிக்கு ஒரு பாடல் இருக்கும். அவர் திரையுலகில் இருந்த காலம் முழுக்க இது நிகழ்ந்திருக்கிறது. புதிய இசையமைப்பாளர்கள் அவர் மீது கொண்ட பெரும்பற்றும், அவர்களின் மீது எஸ்.பி.பி காட்டிய அளப்பரியா அன்பும் மட்டுமே அதற்குக் காரணம். அதனால்தான் அவரது ‘பிளேலிஸ்ட்’டை எடுத்துப் பார்த்தால், ஒரு சில படங்களுக்கு இசையமைத்தவர்களின் பாடல்களும் அதில் இருக்கும். அவை ‘ஹிட்’ ரகத்தில் இருக்கும்.

யுவன்சங்கர் ராஜாவுக்கு ‘ஈரநிலா என் விழிகளில்’ பாடல் தந்திருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத்தின் முதல் படமான ‘தேவி’யில் மொத்தமுள்ள 11 பாடல்களில் 8 பாடல்கள் எஸ்.பி.பி. பாடியது. தேவாவின் முதல் படமான ‘மாட்டுக்கார மன்னாரு’வில் பாடியவர், அவருக்கு வாழ்வு தந்த ‘மனசுக்கேத்த மகராசா’வில் ‘முகமொரு நிலா’வைப் பாடியிருப்பார். தேவேந்திரன் இசையமைத்த ‘மண்ணுக்குள் வைரம்’ படத்தில் ’பொங்கியதே காதல் வெள்ளம்’ உட்பட 4 பாடல்களுக்கு உயிரூட்டியிருப்பார். ஆதித்யனுக்காக ‘சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே’வை பரிசளித்திருப்பார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிமுகம் தந்த ‘ரோஜா’வில் ‘காதல் ரோஜாவே’ என்று உருகியிருப்பார். எவரிடமும் வித்தியாசம் பாராட்டும் குணம் அவரிடத்தில் கிடையாது.

டி.ராஜேந்தர், எஸ்.ஏ.ராஜ்குமார் என்று எண்பதுகள், தொண்ணூறுகளில் அறிமுகமான பல இசையமைப்பாளர்கள் தங்களது முதல் படத்தில் எஸ்.பி.பிக்கு பாடல்களை அள்ளிக் கொடுப்பது ஒரு வழக்கம். 2000க்கு பிறகு வந்த இசையமைப்பாளர்கள் அவ்வாறில்லை என்றபோதும், தங்களது இசையில் எஸ்.பி.பியை பாட வைக்கப் பிரயத்தனப்பட்டிருக்கின்றனர்.

அதனால் தான் ‘நான் போகிறேன் மேலே மேலே’ என்று ‘நாணயம்’ படத்தில் அவர் பாடியது 2கே கிட்ஸ்களுக்கும் பிடித்தமானதாக உள்ளது. ’ஐயய்யோ நெஞ்சு அலையுதடி’ பாடல் கேட்கும்போதெல்லாம் நெஞ்சில் கொண்டாட்டத்தை விதைக்கிறது.

அவரால் ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ என்று பாடல்வரிகளை ரசித்துச் சிலாகிக்கவும் முடியும். ‘வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை’ என்று வரிகளை வட்டமாகச் சுருட்டி அதன் மீதமர்ந்து ’வவ்வவ்வே’ காட்டவும் செய்யும். ’மலரே மௌனமா’ என்ற பாடல் வழியே எந்தக் காலத்து காதலர்களையும் ஊடலின் பிடியில் இருந்து விடுவிக்க முடியும்.

எஸ்.பி.பியின் குரலில் வழியும் இளமை, அவரது ஆன்மாவோடு இரண்டறப் பிணைந்தது. அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. அதனால்தான், வயது ஏற ஏற அவரது குரலின் தன்மை மாறினாலும், அதில் இருந்த இளமையின் சாரம் கொஞ்சம் கூடக் குறையவில்லை. அவரது மறைவுக்கு முன்பாகப் பாடிய பாடல்கள் கூட அதற்கு விதிவிலக்கில்லை. ‘அப்படியா’ என்று ஏளனத்துடன் இதனைப் படிப்பவர்கள், தமன் இசையில் ’டிஸ்கோ ராஜா’ படத்தில் இடம்பெற்ற ‘நுவ்வு நாதோ யெமன்னாவோ’ பாடலைக் கேட்டுவிட்டு மேற்கொண்டு அதனைத் தொடரலாம். அப்படிச் சவால் விடும் அளவுக்கு, ‘வளையோசை கலகலவென’ பாடலின் இன்னொரு வடிவமாக அதனை மாற்றியிருப்பார் எஸ்.பி.பி.

’நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்’ பாடும்போது கூத்தாடிய ஒரு தலைமுறை, இன்று நரைமுடியுடன் இந்தப் பாடலையும் கேட்டு ரசிக்கிறது. மனதுக்கு நரை கிடையாது என்பதற்கான அர்த்தம் அது.

எஸ்.பி.பி. என்றென்றும் இளமையின் குரலாக அடையாளம் காணப்படும் ஒரு ஆளுமை. அவரை நினைவுகூரத் தனியாகச் சந்தர்ப்பம் தேடத் தேவையில்லை. அவரது குரலில் ஒலிக்கும் ஒரேயொரு பாடல் போதும். அதன்பிறகு நம்மையும் அறியாமல் அவரது பாடல்களைக் காதுகள் கேட்கத் தொடங்கும். பாடல்கள் என்ன பாவத்தில் அமைந்தாலும், அதன் தன்மையினுள் மனம் ஊறிப் பெருக்கும். ஒரு கொண்டாட்ட மனநிலை அவரது குரல் வழியே மெல்லப் பரவும்.

அதையும் மீறி, அவரது பிறந்தநாளுக்காக ஒரே ஒரு பாடலைக் கேட்க வேண்டுமென்றால், ‘நிழல்கள்’ படத்தில் இளையராஜா எஸ்.பி.பாலசுப்பிரமணியமுக்கு தந்த ‘மடை திறந்து தாவும் நதியலை நான்’ கேட்கலாம். அல்லது ‘வாழ்க்கை’யில் வரும் ‘காலம் மாறலாம் நம் காதல் மாறுமா’வை ரசிக்கலாம். இன்னும் பல பாடல்கள் இந்த வரிசையில் வந்துகொண்டேதான் இருக்கும். வேறு மொழி ரசிகர்களும் கூட இதேவிதமான உணர்வைப் பெறத்தான் செய்வார்கள். பல ஆயிரம் பாடல்கள் தந்தவரைச் சில நூறுகளில் எப்படி அடக்க முடியும்?!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மாங்கொட்டை வற்றல் களனி

தோனி பாணியில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கேதர் ஜாதவ்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: கேசவ விநாயகனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

நாளை ரிசல்ட் : எடப்பாடியும் தியானம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share