டெட்பூல் & வோல்வரின்: விமர்சனம்!

Published On:

| By Selvam

Deadpool & Wolverine Movie Review

உதயசங்கரன் பாடகலிங்கம்

ஹாலிவுட்டில் ஒரு ‘ஜெயிலர்’!

சூப்பர்ஹீரோக்களையே கிண்டலடிக்கிற ஒரு நபரை ரசிகர்கள் ‘சூப்பர்ஹீரோ’ ஆக ஏற்றுக்கொள்வார்களா? அது சாத்தியம் என்று நிரூபித்தது ‘டெட் பூல்’. சகட்டுமேனிக்கு எல்லோரையும் கிண்டலடிக்கிற, சாகசங்களையே கேலிக்கூத்தாகவும் குரூரமாகவும் மேற்கொள்கிறவராக வெளிக்காட்டியது அப்பாத்திரம். அதுவே, ’டெட்பூல்’ படங்களின் யுஎஸ்பியாகவும் அமைந்தது. அதையே முதலீடாக வைத்துக்கொண்டு, ‘அவெஞ்சர்ஸ்’ சீரிஸில் இறந்து போவதாகக் காண்பிக்கப்பட்ட ‘வோல்வரின்’ பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது, தற்போது வெளியாகியிருக்கிற ‘டெட்பூல் & வோல்வரின்’.

’என்னடா, டைட்டிலே அமெச்சூராக இருக்குதே’ என்று யோசித்தால், அதற்கேற்றாற் போலவே ட்ரெய்லர் கூட ‘சுமார்’ என்ற ரகத்தில் இருந்தது. ‘சரி, படத்தைப் பார்ப்போம்’ என்று சென்றால், அங்கு எத்தகைய அனுபவம் கிட்டியது?

Deadpool & Wolverine Movie Review

தூசி தட்டப்படும் பாத்திரங்கள்!

டெட்பூல் ஆக இருந்து வரும் வேடு வில்சன் (ரேயன் ரினால்ட்ஸ்), அவெஞ்சர்ஸ் குழுவில் இடம்பெறப் பகீரதப் பிரயத்தனம் செய்கிறார். அதற்காக, அது சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்திக்கிறார். ஆனால், அவரால் அதில் பங்கேற்க முடியாமல் போகிறது.

ஆறு ஆண்டுகள் கழித்து, ‘டெட் பூல்’ எனும் சாகச நாயகன் அந்தஸ்தை விட்டு விலகிச் சாதாரண வாழ்க்கையை வாழ்கிறார் வேடு வில்சன். தனது நண்பர்கள், தோழிகளுடன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அப்போது, ‘அவெஞ்சர்ஸ்’ குழுவைச் சேர்ந்த வோல்வரின் உடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.

அதனைச் சாதிக்காவிட்டால், ‘இப்போது நீங்கள் இருக்கும் டைம்லைன் அழிந்து, அதன் மூலமாக அந்த பிரபஞ்சத்தில் இருக்கிற உங்களது நண்பர்களும் இறந்துவிடுவார்கள்’ என்று சொல்லப்படுகிறது. அந்த நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு வோல்வரின் மட்டுமே உதவ முடியும் என்ற நிலையில், அவரைத் தேடிச் செல்கிறார் வேடு வில்சன். இறுதியாக, மிக மோசமான நிலையில் இருக்கும் ஒரு வோல்வரினை (ஹக் ஜாக்மேன்) சந்திக்கிறார்.

டெட் பூலிடம் மேற்சொன்ன விஷயத்தைச் சொன்ன பேரடாக்ஸ், குயுக்தியாக வோல்வரினையும் டெட் பூலையும் ‘வாய்டு’ எனும் இடத்திற்கு அனுப்புகிறார். சூப்பர்ஹீரோக்களுக்கான காலக்கெடு முடிந்தததும் குப்பைத்தொட்டியில் போடுவது போல, அந்த இடத்திற்கு அனுப்பும் வழக்கத்தை பேரடாக்ஸ் கையாண்டு வருகிறார்.

அங்கிருந்து வெளியேறினால் மட்டுமே, மீண்டும் பேரடாக்ஸை சந்திக்க முடியும். அதற்காக, அந்த வாய்டுக்கு தலைமை வகிக்கும் கேசண்ட்ரா நோவாவை இருவரும் சந்திக்கின்றனர். அவரோ, ‘என்னால் உங்களுக்கு உதவ முடியும். ஆனால், அதனைச் செய்ய மாட்டேன்’ என்று இருவரையும் சிறை பிடிக்க முயற்சிக்கிறார்.

நோவாவிடம் இருந்து டெட்பூல், வோல்வரின் இருவரும் தப்பிக்கின்றனர். தொடக்கம் முதலே டெட்பூலுக்கு உதவத் தன்னால் முடியாது என்று சொல்லி வருகிறார் வோல்வரின். அந்தச் சூழலில், ’இன்னும் சிலரது உதவி கிடைத்தால் தேவலை’ என்று நினைக்கிறார் டெட்பூல்.

அப்போது எலக்ட்ரா, கேம்பிட், லாரா, பிளேடு ஆகியோரின் அறிமுகம் அவர்களுக்குக் கிடைக்கிறது. ஆறு பேரும் ஒன்று சேர்ந்து சென்றால் மட்டுமே நோவாவைச் சிறைபிடித்து, அவரின் மூலமாக மீண்டும் பேரடாக்ஸை சந்திக்க முடியும் என்று முடிவு செய்யப்படுகிறது.

திட்டப்படி ஆறு பேரும் நோவா இருக்குமிடத்திற்குள் நுழைகின்றனர். அதன்பின் என்ன நடந்தது? டெட்பூலின் நண்பர்களைக் காப்பாற்ற வோல்வரின் துணை நின்றாரா என்று நகர்கிறது ‘டெட்பூல் & வோல்வரின்’ படத்தின் மீதி.

’20த் செஞ்சுரி பாக்ஸ்’ நிறுவனத்தை ‘டிஸ்னி’ நிறுவனம் கையகப்படுத்தியபிறகு, பல சூப்பர்ஹீரோ பாத்திரங்கள் தூசி தட்டப்பட்டு படங்கள் ஆக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அந்த வரிசையில், இறந்ததாக முடிக்கப்பட்ட வோல்வரினை டெட் பூல் உயிர்ப்பிப்பது போல இதனை ஆக்கியிருக்கிறார் இயக்குனர் ஷான் லெவி.

இது போக ‘அவெஞ்சர்ஸ்’ சீரிஸில் உள்ள பல பாத்திரங்கள் இதில் லேசாகக் காட்டப்படுகின்றன. நம்மூரில் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தில் கார்த்தியின் ‘கைதி’ பாத்திரக் குரலைக் கேட்டு எப்படியொரு உற்சாகக் குரல் எழுந்ததோ, அதைவிடப் பல மடங்கு புளகாங்கிதத்தை ‘மார்வல் சினி யுனிவர்ஸ்’ஸை சிலாகிப்பவர்களிடம் காண முடிந்தது.

’துபாய் தூத்துக்குடி, ஈரோடு பக்கம் எங்கயோ இருக்கு’ என்று சொல்லும் ‘வடிவேலு’ போல ‘அட்வெஞ்சரஸ்’ படங்கள் ஓடும் திரையை வெறித்துப் பார்ப்பவர்களுக்கு, இந்த ‘எம்சியு’ விசிறிகளைப் பார்த்தால் வேற்றுக்கிரகவாசிகளாகத்தான் தெரியும்.

அவர்களுக்காகவே, இதில் பல ‘சாகச’ பாத்திரங்கள் தூசி தட்டப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அதனால், வெறுமனே ‘டெட் பூல்’ பார்த்துவிட்டு இதனைப் பார்ப்பவர்கள் நிறைய ‘சோதனை’களை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

தமிழில் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியோடு மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என்று பல நட்சத்திரங்களைக் காட்டும்போது ரசிகர்கள் கைதட்டி வரவேற்றார்கள். அதே தொனியில், அமெரிக்க ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற ‘அவெஞ்சர்ஸ்’ குழுவினரோடு ‘பெண்டாஸ்டிக் ஃபோர்’ உட்பட வேறு சில சூப்பர்ஹீரோக்கள், சூப்பர்ஹீரோயின்கள் காட்டப்பட்டுள்ளனர். அதற்கு வரவேற்பும் கிடைக்கும்போது, ‘இது ஒரு ஹாலிவுட் ஜெயிலர்’ என்றே எண்ணத் தோன்றுகிறது.

Deadpool & Wolverine Movie Review

அசத்தும் டைட்டில் காட்சி!

‘டெட்பூல் & வோல்வரின்’ படத்தை 3டியில் பார்ப்பது நலம். காரணம், அதற்கேற்ற வகையில் படமாக்கப்பட்டு, இதில் விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட நுட்பங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

வோல்வரின் எலும்புக்கூட்டை வைத்துக்கொண்டு டெட் பூல் சண்டையிடுவது போன்று அமைக்கப்பட்ட டைட்டில் காட்சி அதற்கான ஒரு சோறு பதம். அக்காட்சி நிச்சயம் ‘கூஸ்பம்ஸ்’ மொமண்ட் ஆக இருக்கும். ஆனால், அதன்பின் வரும் காட்சிகள் அதே தரத்தில் இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.

இடையிடையே வரும் சண்டைக்காட்சிகளும் சில ஷாட்களும் மட்டுமே ‘3டி’ அனுபவத்தைச் செறிவானதாக்குகின்றன.

டெட்பூல் ஆக ரேயன் ரினால்ட்ஸ், வோல்வரின் ஆக ஹக் ஜாக்மேன், நோவா ஆக எம்மா கோரின் நடித்துள்ளனர். இவர்களுடன் மொரீனா ப்க்கரின், ரோப் டெலினே, லெஸ்லி உக்கம்ஸ், மேத்யூ மெக்பதைன் உட்படப் பலர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் போதாதென்று எலக்ட்ராவாக ஜெனிஃபர் கார்னர், பிளேடு ஆக வெஸ்லி ஸ்னிப்ஸ் என்று நாயகர்கள், நாயகியர் சிலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர். இந்தப் படம் போலவே, அவர்களை மையமாக வைத்தும் சில படங்கள் வெளியாகலாம்.

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் ரிச்மண்ட், இசையமைப்பாளர் ராப் சிமோன்சன், படத்தொகுப்பாளர்கள் டீன் ஜிம்மர்மேன், ஷேன் ரெய்டின், தயாரிப்பு வடிவமைப்பாளர் ரே சான் என்று பலரது உழைப்பு, ஒவ்வொரு பிரேமையும் ‘ரிச்’ ஆனதாக மாற்றியிருக்கிறது.

ரேயன் ரினால்ட்ஸ், ரெட் ரீஸ், பால் வெர்னிக், ஸெப் வெல்ஸ், ஷான் லெவி ஆகியோர் திரைக்கதை வசனத்தைக் கையாண்டுள்ளனர். பெரும்பாலான காட்சிகள் யூகிப்புக்கு ஏற்றாற் போலவே இருப்பது, இப்படத்தின் மைனஸ்.

’வோல்வரின்’ போன்ற ஆக்‌ஷன் பாத்திரத்தை டெட் பூல் கிண்டலடிப்பது போன்ற காட்சிகள், ‘அவெஞ்சர்ஸ்’ஸின் தீவிர ரசிகர்களுக்கு எந்தளவுக்கு உவப்பானதாக இருக்கும்? அது குறித்துக் கவலைப்படாமல், ‘டெட் பூலை’ வைத்துக்கொண்டு துவம்சம் செய்திருக்கலாம். ஆனால், இப்படம் அதனைச் சாதிக்கவில்லை. அதுவே, ‘மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை’ என்ற படக்குழுவினரின் நிலைப்பாட்டை வெளிக்காட்டுகிறது.

Deadpool & Wolverine Movie Review

‘ஏன், இந்தப் படத்துலதான் காமெடி சீன்ஸ் இருக்குமே’ என்பவர்கள், நிச்சயம் ‘டெட் பூல்’ விசிறியாக இருக்கமாட்டார்கள்.

இயக்குனர் ஷான் லெவி, ஒரு அபாயகரமான வேலையைச் செய்து முடித்திருக்கிறார்.

டெட் பூல் உடன் வோல்வரினை இணைப்பதன் வழியாக, வெவ்வேறு காலகட்டத்தில் ஹாலிவுட்டில் கலக்கிய ‘மார்வல்’ நாயகர்களை ஒன்றாகக் காட்ட வகை செய்திருக்கிறார். அதனால், பல பாத்திரங்கள், வித்தியாசமான களங்கள் உருப்பெறக் கூடும். நல்ல விஷயம் தான்.

அதேநேரத்தில், ட்ரெண்டுக்கு ஏற்றாற் போலக் கையில் இருப்பதைக் கொண்டு ‘கமர்ஷியலாக சூப்பர்ஹீரோக்கள் கதையை திரைப்படம் ஆக்கலாம்’ என்பதற்கும் இது விதை போட்டிருப்பதை மறுக்க முடியாது. இதே பாணியில் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் பாத்திரங்களும் கூட ஹாலிவுட்டில் துவைத்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆதலால், ‘டெட் பூல் & வோல்வரின்’ படம் எத்தகைய வெற்றியைப் பெறும் என்று சொல்ல முடியாது. ‘மிகச்சுமாரான படம்’ என்று சொல்லத்தக்க வகையிலேயே இது அமைந்துள்ளது. 3டியில் பார்க்கும்போது உருவாகும் பிரமிப்பின் காரணமாக, ‘சராசரிக்கும் மேலே’ என்ற நிலையைக் கூட இப்படம் அடையலாம். அதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பா? லிஸ்ட் போட்ட மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சமஸ்கிருதம் தெரிந்தால் தான் வேலையா? தொல்லியல் துறைக்கு இது தேவையா? விளாசிய சீமான்

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையம் குளு குளு அப்டேட்!

அடேங்கப்பா… முதல் நாளே இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸில் தூள் கிளப்பிய ‘ராயன்’

2012 ஜெயலலிதாவுக்கு வார்னிங் பெல்… 2024 மம்தாவுக்கு மைக் ஆஃப்… மாநில உரிமைக்கு டெல்லி தரும் மரியாதை!

PARIS 2024 OLYMPICS: ஆரம்பமே அதிர்ச்சி… 10மீ ஏர் ரைபில் பிரிவில் வெளியேறிய இந்தியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share