எத்தனை பொருளாதாரத் தடைகள், எத்தனை சமாதானப் பேச்சுக்களை சந்தித்தாலும் ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதில் முனைப்பாக உள்ளது. குறிப்பாக கிழக்கு உக்ரைன் பகுதியை கைப்பற்றுவதில் ரஷ்யப் படைகள் தற்போது முனைப்பு காட்டி வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போரானது 100 நாட்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல பேர் உக்ரைன் நாட்டை விட்டு பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷ்ய படைகளின் முன்னேற்றத்தை தடுக்க உக்ரைன் படையும் போராடி வருகிறது. ஏற்கனவே டான்பாஸ் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன. தற்போது டன்பாஸ் பகுதியை முழுமையாக கைப்பற்ற ரஷ்ய படைகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
மேலும் டான்பாஸ் பிராந்தியத்தில் இருக்கும் முக்கிய தொழில் நகரமான செவிரோடோனெட்ஸ்க் நகரில் 80 சதவீத பகுதிகளை ரஷ்யப் படைகள் தன் வசமாக்கி உள்ளன. மீதமிருக்கும் 20 சதவீதத்தையும் கைப்பற்ற ரஷ்ய படைகள் தாக்குதல்களை கடுமையாக்கி உள்ளன. இவர்களை தைரியமாக எதிர்த்து உக்ரைன் ராணுவ வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செவிரோடோனெட்ஸ்க் நகருக்கு செல்லக்கூடிய அனைத்து பாலங்களையும் ரஷ்ய படைகள் அழித்துவிட்டன. இதனால் அங்குள்ள பொதுமக்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட செவிரோடோனெட்ஸ்க் நகரில் தற்பொழுது வெளியேற முடியாமல் 12000 பேர் மாட்டிக்கொண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.