உக்ரைன் நாடு தானிய ஏற்றுமதிக்கு ரஷ்யா தடையாக இருக்காது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 100 நாட்களை கடந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக ரஷ்யாவுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் ரஷ்யா மீது அனைத்து நாடுகளும் பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது.
கடந்த வாரம் உக்ரேன் நாட்டிற்கு உதவியாக அதிநவீன ராக்கெட் ஏவுகணைகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்தது. மேலும் இந்த ராக்கெட் 80 கிமீ தூரத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக அழிக்கும். ரஷ்யா நாட்டில் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்த மாட்டோம் என்று உக்ரைன் நாடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து வரும் ராக்கெட் ஏவுகணைகள் உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் முன்னேற்றத்தை தடுக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் நாடு தானிய ஏற்றுமதிக்கு ரஷ்யா தடையாக இருக்காது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “உக்ரைன் துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை பாதுகாப்பாக அனுப்ப உறுதி செய்ய ரஷ்யா தயாராக உள்ளது. தானியங்களை அமைதியான முறையில் உக்ரைன் நாடு ஏற்றுமதி செய்ய முழு ஒத்துழைப்பு அளிக்க ரஷ்ய அரசு தயாராக உள்ளது.” என்று தெரிவித்தார்.
மேலும் உக்ரைன் துறைமுகங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் போது ரஷ்ய படை தாக்குதல் நடத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
