அதிபர் தேர்தலில் 87.8 சதவீத வாக்குகளை பெற்றுள்ள நிலையில், 5வது முறையாக ரஷ்ய நாட்டின் அதிபராக விளாடிமிர் புதின் பதவியேற்க உள்ளார்.
ரஷ்யாவில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி கடந்த 3 நாட்களாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டு மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
ரஷ்யாவின் பிடியில் உள்ள உக்ரைனின் கெர்சான் பகுதி மக்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் வாழும் ரஷ்ய மக்களும் அந்தந்த தூதரகங்களில் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து நேற்று முதல் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், 70 சதவீத தேர்தல் நெறிமுறைகளை செயலாக்கியதன் அடிப்படையில் 88.7 சதவீத வாக்குகளை விளாடிமிர் புதின் பெற்றுள்ளதாக ரஷ்ய கூட்டமைப்பின் மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் 5வது முறையாக ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் பதவியேற்க உள்ளார். இந்த வெற்றியின் மூலம் ரஷ்யா வரலாற்றில் ஜோசப் ஸ்டாலின் பதவி காலத்தை விஞ்சி, நீண்ட காலம் அதிபர் பதவி வகித்தவர் என்ற பெருமையை புதின் பெற்றுள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு புதின் முதன்முறையாக ரஷ்ய நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2004, 2012 மற்றும் 2018 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்று ஆட்சியில் இருந்தார்.
புதினை தொடர்ந்து ரஷ்ய கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நிகோலாய் கரிடோனோவ் 4.1 சதவீத வாக்குகளுடன் 2வது இடத்தையும், புதிய மக்கள் கட்சியைச் சேர்ந்த விளாடிஸ்லாவ் டாவன்கோவ் 4.8 சதவீத வாக்குகளுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
லிபரல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் ரஷ்யா கட்சி வேட்பாளர் யோனிட் ஸ்லட்ஸ்கி மொத்த வாக்குகளில் 3.15 சதவீதத்தை மட்டுமே பெற்றார்.
வெற்றி உரையில் புதின் எச்சரிக்கை
இந்தநிலையில் மாஸ்கோவில் உள்ள தேர்தல் ஆணைய தலைமையகத்தில் வெற்றி உரையாற்றிய புதின், 3ஆம் உலகப்போர் குறித்து எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
அவர், “உங்கள் ஆதரவு மற்றும் இந்த நம்பிக்கைக்காக நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
யார் நம்மை மிரட்ட நினைத்தாலும், எவ்வளவுதான் நம்மை அடக்க நினைத்தாலும், நம் விருப்பம், நம் உணர்வு – வரலாற்றில் இப்படி எதிலும் அவர்கள் வெற்றி பெற்றதில்லை. இது இப்போது வேலை செய்யவில்லை, எதிர்காலத்திலும் வேலை செய்யாது.
ரஷ்யாவுக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணிக்கும் இடையே மோதல் அபாயம் உள்ளது. மூன்றாம் உலகப் போரில் இருந்து உலகம் ஒரு படி தொலைவில் உள்ளது என்பதற்கான அர்த்தம் இது. ஆனால் அத்தகைய சூழ்நிலையை யாரும் விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறாமல் இருப்பதை பிரான்ஸ் உறுதி செய்ய வேண்டும் என்றும் உக்ரைனில் தரைப்படைகளை எதிர்காலத்தில் நிலைநிறுத்துவதை நிராகரிக்க முடியாது என்றும் கடந்த வாரம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பேட்டி அளித்திருந்தார்.
இதனை குறிப்பிட்ட புதின், நேட்டோ இராணுவ வீரர்கள் ஏற்கனவே உக்ரைனில் இருக்கின்றனர். உக்ரைன் போர்க்களத்தில் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு இரண்டையும் பேசப்படுகிறது. இது அவர்களுக்கு (உக்ரைன்) நல்லது அல்ல. ஏனென்றால் அவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் தாக்குதல்கள் தொடர்ந்தால், ரஷ்யப் பகுதியைப் பாதுகாக்க உக்ரைன் பிரதேசத்தில் இருந்து ஒரு இடையக மண்டலத்தை உருவாக்குவோம்” என்று புதின் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
IPL 2024 : ஆன்லைனில் மட்டுமே… CSKvsRCB போட்டி டிக்கெட் பெறுவது எப்படி?