440 நாள்களுக்கு மேலாக நடந்துவரும் ரஷ்யா-உக்ரைன் போர் தீவிர நிலையை எட்டியிருக்கிறது. தங்கள் அதிபர் புதினைக் கொலை செய்ய முயற்சி செய்வதாக உக்ரைன் மீது குற்றம் சுமத்திய ரஷ்யா, உக்ரைனின் பிரதானப் பகுதிகளைத் தரைமட்டமாக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது.
மே 3-ம் தேதி இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றில், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலுள்ள அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் கோபுரத்தை நோக்கி வரும் ஆளில்லா டிரோன் ஒன்று வெடித்துச் சிதறும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.
இதையடுத்து, “ரஷ்யக் கூட்டமைப்பின் தலைவரைக் கொல்ல நினைத்து இரண்டு ஆளில்லா டிரோன்களை கிரெம்ளின்மீது ஏவியிருக்கிறது உக்ரைன். எங்களது மின்னணு ரேடார் தளவாடங்கள் அந்த டிரோன்களை வீழ்த்திவிட்டன.
மே 9-ல் நடைபெறவிருக்கும் `வெற்றி தின’ (நாசி படையைச் சோவியத் ஒன்றியம் வீழ்த்திய நாள்) அணிவகுப்புக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் திட்டமிட்ட பயங்கரவாதச் செயல்.
தாக்குதல் நடந்த நேரத்தில் அதிபர், மாஸ்கோவுக்கு வெளியிலுள்ள நோவோ ஒகாரியோவோ மாளிகையிலிருந்தார். இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கட்டடங்களும் சேதமடையவில்லை” என்று அறிக்கை வெளியிட்டது கிரெம்ளின் மாளிகை.
இதற்கு பதில் அளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “புதினுக்கு இந்தப் போரில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. அதனால், அவரின் படையை இனி ஊக்குவிக்க முடியாத நிலையில் இருக்கிறார்.

அதோடு, ரஷ்ய வீரர்களை இனியும் மரணத்தை நோக்கி அனுப்ப முடியாது. எனவே, தனது படை முன்னோக்கிச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
மேலும் ரஷ்ய குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த உக்ரைன், “ரஷ்யாவின் நாடகம்தான் இது. வெற்றி தினத்துக்கு முன்பு ஒரு பதற்றமான சூழலை உருவாக்கி, உலக நாடுகளிடம் அனுதாபம் தேட நினைக்கிறது ரஷ்யா. ஏற்கெனவே குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்திவரும் ரஷ்யா, இனி இதைக் காரணமாகச் சொல்லி மேலும் பல உக்ரைன் மக்களைக் கொலை செய்ய நினைக்கிறது.
அது மட்டுமல்லாமல், கடந்த காலங்களில் முயன்றதைப்போல மீண்டும் உக்ரைன் அதிபரைக் கொல்ல முயலும். ஆனால், நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்” என்றது.
இந்த நிலையில், உக்கிரமான தாக்குதல்களை உக்ரைன் மீது நடத்தத் தொடங்கியிருக்கிறது ரஷ்யா. `இரானில் தயாரிக்கப்பட்ட சக்திவாய்ந்த, கொடூர பாதிப்புகளை ஏற்படுத்தும் டிரோன்களான கமிகேஸ் டிரோன்கள் மூலம் தீவிரத் தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது ரஷ்யா’ எனக் குற்றம்சாட்டியிருக்கிறது உக்ரைன்.
“மே 8-ம் தேதி இரவில் மட்டும், இதுவரை இல்லாத அளவில் ஒரே நேரத்தில் 60 டிரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 36 டிரோன்கள் தலைநகர் கீவ் நோக்கி ஏவப்பட்டவை” என்று தெரிவித்திருக்கிறது. இதில் 35 டிரோன்களைச் சுட்டு வீழ்த்திவிட்டதாக உக்ரைன் ராணுவம் கூறியிருக்கிறது.

கடந்த சில நாள்களாக உக்ரைனின் குடியிருப்புப் பகுதிகளிலும் தாக்குதல்களை நடத்திவருகிறது ரஷ்யா. டிரோன்களைத் தாண்டி ஏவுகணைகளையும் உக்ரைனை நோக்கி ஏவிக்கொண்டிருக்கிறது ரஷ்யா. பாக்முட் நகரைக் கைப்பற்றிவிட்டால், உக்ரைனுக்குள் எளிதாக ரஷ்யப் படைகள் நுழைந்துவிடலாம் என்பதால், பல மாதங்களாக அங்கு தனிக் கவனம் செலுத்திப் போரிட்டு வருகிறது ரஷ்யா.
இந்த நிலையில் “உக்ரைனைக் கைப்பற்றாமல் ரஷ்யா ஓயப்போவதில்லை; உக்ரைனும் விடுவதாயில்லை. போர் உச்சகட்டத்தை எட்டியிருப்பதால், உலக நாடுகள் முழுவதும் பெரும் பொருளாதாரச் சிக்கல்கள் உண்டாகும்” என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
உக்ரைன் மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்தையும் அவதிக்குள்ளாக்கிவரும் இந்தப் போர், இப்போது முடியாது என்பதைத்தான் தற்போதைய நிலவரங்கள் உணர்த்துகின்றன.
ராஜ்