உக்ரைன் தானிய ஏற்றுமதி துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல்!

Published On:

| By Selvam

‘ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியைத் தொடர முடியும்’  என்று  உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி அறிவித்துள்ள நிலையில் உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடேசா மீது  இரண்டாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்ய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது. உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உட்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இந்த போர் காரணமாக தானிய ஏற்றுமதி நின்று மிகப் பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தவிர்க்க கடந்த வருடம் ஜூலை மாதம் ஐ.நா மற்றும் துருக்கி தலையிட்டு ரஷ்யாவுடன் ஓர் உடன்படிக்கை செய்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம் எனும் அந்த உடன்படிக்கையின்படி உக்ரைனின் மூன்று துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷ்யா சம்மதித்தது.

ADVERTISEMENT

இந்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் இதை மீண்டும் புதுப்பிக்க ரஷ்யா மறுத்து, இதிலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதனால், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து பல்லாயிரக்கணக்கான டன் தானிய ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் உருவாகி அதன் மூலம் பெரும் உணவு பஞ்சம் ஏற்படலாம் என அச்சம் உருவானது..

ADVERTISEMENT

இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக பேசிய அவர்,

“உலகின் 40 கோடி மக்கள் இந்த உணவு பொருட்களை நம்பியிருக்கின்றனர்.  உக்ரைன் உணவு விநியோகம் செய்வதை தடுக்க ரஷ்யாவுக்கு எந்த உரிமையும் இல்லை.

ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியைத் தொடர முடியும். எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை” என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடேசா மீது  இரண்டாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் 25 டிரோன்கள் மற்றும் ஆறு கப்பல் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து நேற்றிரவு உக்ரைனின் தெற்கு ஒடேசா பகுதியில் ரஷ்யா தாக்குதல்களை நடத்தியிருப்பது, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராஜ்

மகளிர் உரிமைத் தொகை: இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம்!

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share