ஊரக வளர்ச்சித் துறை கணினி உதவியாளர்கள் போராட்டம்!

Published On:

| By Balaji

ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை கணினி உதவியாளர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட கணினி உதவியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளங்களைக் கணக்கிட்டு வழங்கும் பணியை அவர்கள் செய்து வருகிறார்கள்.

ADVERTISEMENT

தமிழக அரசு, கணினி உதவியாளர்களுக்குத் தேர்வு வைத்து நிரந்தர பணி வழங்கப்படும் என அரசு கடந்த 2017ஆம் ஆண்டு சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் எவ்வித தேர்வும் அரசு வைக்கவில்லை. இதனால் ஊரக வளர்ச்சித் துறை கணினி உதவியாளர் சங்கத்தினர் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 15) முதல் ஆறு மாவட்டங்களில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை கணினி உதவியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று (ஜூன் 16) மாலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரண்ட அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் சமூக விலகலைக் கடைப்பிடித்தவாறு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

2014ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு ஆண்டுதோறும் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்றும், வருங்கால வைப்பு நிதி மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். இந்தப் போராட்டம் இரவு வரை தொடர்ந்தது.

இதே போல் நாகை மாவட்டத்தில் மொத்தம் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் கீழ் 43 கணினி உதவியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் (ஜூன் 15) விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து நேற்று (ஜூன் 16) இரண்டாவது நாளாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share