ரசிகர்களைக் கதறவிடுபவன் – ருத்ரன்
ஒரு திரைப்படம் என்பது அதில் சம்பந்தப்பட்ட கலைஞர்களுடன் இணைந்து இயக்குனர் முன்வைக்கும் ஒரு உலகம். ரசிகர்களான நமக்கு அது புதிதாகத் தெரியும்போதோ அல்லது புத்துணர்வூட்டும்போதோ அப்படம் வெற்றியை எட்டும். சில நேரங்களில் ஒரு திரைப்படம் சம்பந்தப்பட்ட அனைவருமே வேறொரு உலகத்தில் வாழ்வார்கள். அவர்கள் படைக்கும் படமோ நம்மை பாடாய் படுத்தும்.
எதற்கு இந்த ‘பில்டப்’ என்று யோசிக்கிறீர்களா? வேறொன்றுமில்லை, ராகவா லாரன்ஸ் நடித்த ‘ருத்ரன்’ படம் பார்த்தபோதுதான் மேற்சொன்னது மனதில் தோன்றியது.

ருத்ரன் கதை
ஒரு கமர்ஷியல் படத்தை வெற்றிகரமானதாக்க நாவல் தேவையில்லை; ஒரு சிறுகதை அல்லது ஒரு பக்கக் கதை அளவுக்கு முழுக்கதையும் இருந்தாலே போதும்.
அந்த வகையில், ‘ருத்ரன்’ கதையை மிக எளிதாகச் சொல்லிவிட முடியும்.
பெற்றோருக்குச் செல்லப்பிள்ளையாக வளரும் ஒரே மகன் ருத்ரன். தந்தையின் டிராவல்ஸ் நிறுவனத்தைக் கவனிப்பதில் அவருக்கு விருப்பமில்லை. ஐடி துறையில் ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்பதே அவரது எதிர்பார்ப்பு. இத்தனைக்கும் அவரது வயது முப்பதைத் தொட்டிருக்கிறது. எம்.டெக். படித்த ஒருவருக்கு அத்தனை வயது வரை வேலை ஏதும் கிடைக்கவில்லையா என்று கேள்வி உங்கள் மனதில் எழுந்தால், நீங்கள் ‘ருத்ரன்’ படம் பார்க்கத் தகுதியானவரில்லை.
ஐடி நிறுவனமொன்றில் வேலை கிடைத்து, அங்கு சிறப்பாக வேலை பார்த்து, ‘ஆன் சைட்’ பணிக்காக லண்டன் செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது. வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று அதனை ஏற்க மறுக்கிறார் ருத்ரன். ஆனால், விதி அவரை அந்த வேலையை ஏற்க வைக்கிறது.
பார்ட்னர் ஏமாற்றிய காரணத்தால், கடனாக வாங்கிய தொகையைக் கட்ட முடியாமல் தத்தளிக்கிறார் ருத்ரனின் தந்தை. அந்தக் கவலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணிக்கிறார். கடனை அடைக்க, டிராவல்ஸ் நிறுவனத்தையும் வீட்டையும் விற்கும் சூழல் ஏற்படுகிறது. அதனைத் தவிர்க்க, லண்டன் சென்று வேலை பார்க்க முடிவெடுக்கிறார் ருத்ரன். நினைத்தது போலவே, சில ஆண்டுகள் கடுமையாகப் பணியாற்றி கடனை அடைக்கிறார். ஆனாலும் வில்லனோடு ஒரு பிரச்சனை உருவாகிறது.
வெளிநாட்டில் பிள்ளைகள் வேலை பார்க்க, உள்நாட்டில் தனியாக இருக்கும் பெற்றோரைக் கொலை செய்து, அவர்களது சொத்துகளை ‘அபேஸ்’ செய்கிறது ஒரு கும்பல். அவர்களது பார்வை ருத்ரனின் வீடு மீது விழுகிறது. ருத்ரனின் தாய் இந்திராணி தனியாக இருக்க, வீட்டுக்குள் அக்கும்பல் புகுகிறது. அந்த நேரத்தில், ருத்ரனின் கர்ப்பிணி மனைவி அனன்யா வீட்டின் வெளியே நிற்கிறார்.
இந்தக் கதையில், வேலை கிடைப்பதற்கு முன்பாகவே அனன்யாவைச் சந்திக்கிறார் ருத்ரன். பார்த்தவுடன் காதல் தீ பற்றுவதும், வாழ்வின் போராட்டங்களுக்கு நடுவே இருவரும் ஒன்றிணைவதும் இன்னொரு கிளைக்கதை.
ஆக, வில்லனின் பிடியில் இருக்கும் தாயையும் மனைவியையும் ருத்ரன் காப்பாற்றினாரா இல்லையா என்பதே இந்த படத்தின் கதை. ‘ருத்ரன் தான் லண்டனில் இருக்கிறாரே, அவரால் எப்படி உடனடியாகச் சென்னைக்கு வர முடியும்’ என்ற கேள்வி உங்கள் மனதை அரிக்கிறதா? அந்த கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே வில்லனின் ஆள் ஒருவரை நாயகன் ருத்ரன் அடித்து துவம்சம் செய்வதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. மேற்சொன்னவற்றில் இருந்து ‘ருத்ரன்’ கதை இப்படித்தான் நகரும் என்ற சித்திரம் மனதுக்குள் படர்ந்திருக்குமே! மிகச்சரியாகத் திரையில் அதனைக் காட்சிகளாக வடித்திருக்கிறார் படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கும் கதிரேசன்.
இந்த கதையை ‘கிளாஸ்’ ஆக எடுத்திருந்தால், முடிந்தவரை நற்பெயரைத் தக்க வைத்திருக்கலாம். ஆனால், ராகவா லாரன்ஸ் தான் நாயகன் என்று முடிவு செய்துவிட்ட காரணத்தால் ‘மாஸ் படம் எடுக்கிறேன் பேர்வழி’ என்று திரைக்கதையின் முக்கால்வாசியை சண்டைக்காட்சிகளுக்குத் தாரை வார்த்திருக்கிறார் இயக்குனர். ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் ஸ்டண்ட்மேன் ஒவ்வொருவராக வரிசையில் வந்து ஹீரோவிடம் அடி வாங்கினாலும், வலி எடுப்பதென்னவோ படம் பார்க்கும் நமக்குத்தான்!
பாவம்.. பரிதாபம்..
வில்லனை ‘பவர்ஃபுல்’லாக காட்ட வேண்டுமென்ற முனைப்புடன், பூமி எனும் வில்லன் பாத்திர அறிமுகத்தில் இருந்துதான் கதை தொடங்குகிறது. அது நல்ல விஷயம். ஆனால், அவரது பின்னணி என்னவென்று தெரிந்துகொள்ள வசிப்பிடமோ, உடன் வாழ்பவர்களோ, இதர பழக்க வழக்கங்களோ திரையில் சொல்லப்படவே இல்லை.
பிளாஷ்பேக்கில் கதை சொல்வது மட்டுமல்லாமல், முக்கியமான விஷயங்களை எல்லாம் சுமார் ஐந்தாறு நொடிகளில் ‘மாண்டேஜ்’ ஆகவும் ஆங்காங்கே காட்டியிருக்கிறார் இயக்குனர். இப்படியான முன்னேற்பாடுகள் இந்த பழிக்குப் பழி கதைக்கு மக்களின் மனதைப் பழக்கும் என்ற யோசனை சரிதான். ஆனால், அந்த பழி வாங்கும் கதையை நேர்த்தியாகச் சொல்வதில் தான் ஏகப்பட்ட பிரச்சனைகள்.
உடல் மட்டுமல்லாமல் முகமும் சதை பற்றியிருக்க, லாரன்ஸின் தோற்றமே அவர் நாற்பதுகளின் பின்பாதியில் இருப்பதைச் சொல்லி விடுகிறது. அதுவே அழகுதான். அதனை முன்னிறுத்துவதை விட்டு, அவரை இளமையாகக் காட்டுகிறேன் பேர்வழி என்று எரிச்சல்படுத்துகிறது ‘ருத்ரன்’. இந்த கதையில் லாரன்ஸ் ஏற்ற ருத்ரன் பாத்திரம் பெற்றோரின் செல்லப்பிள்ளையாக வளர்வதையோ,வேலை தேடி அலைவதையோ, காதலில் விழுவதையோ திரையில் காட்டியாக வேண்டிய தேவையே இல்லை.

’ருத்ரன்’ படத்தில் நடித்தவர்கள் அத்தனை பேருமே நன்றாகத் தங்கள் பணியைச் செய்திருக்கின்றனர். நாசர், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட், அவரது ஜோடியாக நடித்தவர், ரெடின் கிங்ஸ்லி, சரத் லோகித்சவா, அபிஷேக் வினோத், ஸ்டன் சிவா, ராஜேஷ் என்று பலர் இதில் நடித்துள்ளனர். சிலரது காட்சிகள் கடைசி நேரத்தில் வெட்டியெறியப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன.
வில்லன் என்ற வகையில் சரத்குமார் திரையில் தோன்றும் கால அளவு அதிகம் தான். ஆனால், கதையோட்டத்தின் இடையே அவரது பாத்திரம் காண்பிக்கப்படாதது பெரிய மைனஸ். இது போன்ற கதைகளில், நாயகன் – வில்லன் சந்திப்பு என்பது மிக முக்கியம். நேருக்கு நேர் சந்தித்திராதபோதும், இருவரும் ஒரே வட்டத்திற்குள் சுற்றி வருகின்றனர் என்று சொல்வது கட்டாயம். இதில், கதை திரைக்கதை வசனம் எழுதிய திருமாறனும் அதனை மறந்திருக்கிறார். இயக்குனரும் மறந்து போயிருப்பது நம்மைச் சோதனைக்குள்ளாக்குகிறது.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், படத்தொகுப்பாளர் ஆண்டனி போன்ற அனுபவமிக்க கலைஞர்கள் கூட, இப்படத்தின் திரைக்கதை அமைப்பு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் பணியாற்றியிருப்பதாகத் தோன்றுகிறது. கலை இயக்குனர் ராஜுவின் கைவண்ணத்தில் ஸ்டண்ட் கலைஞர்கள் இரும்புத்தூண் மீது விழுந்தால் கூட தூசு பறக்கிறது.
பிரமாண்ட கமர்ஷியல் படம் என்ற அங்கீகாரம் பெறத் திரைக்குப் பின் கடும் உழைப்பு கொட்டப்பட வேண்டும். சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசை அதனைச் செய்திருக்கிறது. தியேட்டரில் நாம் இருக்கையை விட்டு எழாமல் இருக்கச் செய்வது அது மட்டுமே. ஆப்ரோ, தரண்குமாரின் ’ஜோர்தாலே’, ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் எனும் புகழ்பெற்ற ஆல்பம் பாடல்களை இதில் சேர்த்திருக்கின்றனர். அப்பாடல்களில் நடன வடிவமைப்பு அருமை. ’தெறி’யில் வரும் ’என் ஜீவன்’ பாணியில், இதில் ‘உன்னோடு வாழும்’ பாடலைத் தந்திருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். கூடவே, உத்வேகமுட்டும் வகையில் ‘பகை முடி’ பாடலை அமைத்துள்ளார்.

‘அய்யோ பாவம்..’, ‘என்னவொரு பரிதாபம்’ என்று சொல்லும் வகையில் ’ருத்ரன்’ திரைக்கதையில் சில கதாபாத்திரங்கள் காட்டப்படுகின்றன. அப்பாத்திரங்கள் அனைத்துமே கதறிக் கண்ணீர் வடிக்கின்றன. படம் பார்த்து முடியும்போது, அந்த பாத்திரங்களின் முகங்களோடு ரசிகர்கள் தங்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். அந்த அளவுக்கு படத்தோடு அவர்கள் ஒன்றிவிட்டதாக நினைக்கக் கூடாது. அப்படி எண்ணும் அளவுக்கு ரசிகர்களைக் கதறவிட்டிருக்கிறது ‘ருத்ரன்’.
ரசிகர்கள் தியேட்டரில் கிண்டலடிப்பார்கள், கத்திக் கூச்சல் போடுவார்கள் என்று தெரிந்தும் அரதப்பழசான ஒரு படத்தைத் தயாரிக்க முரட்டுத் துணிச்சல் வேண்டும். ஆனால், ’ருத்ரன்’ பார்த்து முடித்ததும் ‘இவரா பொல்லாதவன் படத்தைத் தயாரித்தார்’ என்று கதிரேசனைக் குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது.
உதய் பாடகலிங்கம்
“இந்த பூச்சாண்டி எல்லாம் இங்க பலிக்காது“: அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதில்!