லியோ படத்தின் நா ரெடி பாடலுக்கு தடை கோரியும், நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 26) புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22-ந் தேதி படத்தின் முதல் சிங்கிள் வெளியானது.
விஜய் குரலில் வெளியான ’நா ரெடி’ என்ற அந்த பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள அதே வேளையில், கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
விஜய் புகைப்பிடித்தபடி லியோ படத்தின் போஸ்டர் வெளியான போதே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து வெளியான நா ரெடி பாடலிலும், சிகரெட்டையும், மதுவையும் அதிகளவில் உபயோகிப்பதை ஊக்குவிக்கும் வகையில் காட்சிகளும், வரிகளும் அமைக்கப்பட்டுள்ளது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக இன்று புகார் அளித்துள்ளார்.
அதில், “போதைப்பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், ரவுடியிசத்தை உருவாக்கும் வகையிலும் இருப்பதால் நா ரெடி பாடலை தடை செய்ய வேண்டும் என்றும்,
நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
தற்போது புகார் அளித்துள்ள ஆர்.டி.ஐ. செல்வம், கடந்த ஆண்டு வெளியான விக்ரம் பட வெளியீட்டின் போதும், போதைப்பொருள் தொடர்பாக புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
NFC 2023: 2வது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்த தமிழ்நாடு மகளிர் அணி
”மகள் ஷர்மிளா”: புதிய காரை பரிசாக வழங்கி கமல்ஹாசன் வாழ்த்து!
