“ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் தடை செய்ய வேண்டும்” என கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 22, செப்டம்பர் 27 என இருமுறை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பல்வேறு அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த அமைப்பின் முக்கியத் தலைவர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 28) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் அதன் துணை அமைப்புகளான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு, ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், என்.சி.எச்.ஆர்.ஓ. மனித உரிமை அமைப்பு ஆகியவையும் சட்டவிரோதமானவை என மத்திய அரசு அறிவித்தது.

இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிட்டத்தட்ட 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜுவால் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களுக்குள் செல்ல போலீஸ் தடை விதித்துள்ளது.
மேலும் அந்த அமைப்பின் இணையதளம் மற்றும் அதன் சமூக வலைதளப்பக்கங்கள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரளா மாநிலம், மலப்புரத்தில் இன்று (செப்டம்பர் 28) செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தடை விதிக்குமாறு கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர், “பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்தது மட்டும் தீர்வாகாது. ஆர்எஸ்எஸ் அமைப்பு நாடு முழுவதும் இந்து வகுப்புவாதத்தை பரப்பி வருகிறது.
வகுப்புவாதத்தை பரப்புவது நாட்டுக்கு மிகவும் ஆபத்து. ஆர்.எஸ்.எஸ், பி.எஃப்.ஐ இரண்டு அமைப்புகளும் ஒரே மாதிரியானவைதான்.
அரசாங்கம் இரண்டு அமைப்புகளையுமே தடை செய்ய வேண்டும். எதற்காக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் அமைப்பை மட்டும் அரசு தடை செய்துள்ளது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெ.பிரகாஷ்