ADVERTISEMENT

ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published On:

| By Monisha

ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்குத் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி ‘காந்தி ஜெயந்தி’ அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் 50 இடங்களில் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால் இதற்கு அனுமதி வழங்கக் காவல் துறை மறுத்துவிட்டது.

ADVERTISEMENT

இதனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இதர 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் பேரணி நடத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.

ADVERTISEMENT

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு, கருத்துரிமை, பேச்சுரிமையைத் தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் எனக் கூறி தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ததோடு, கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ் பேரணியை அனுமதிக்க காவல்துறைக்கும் உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கைக் கடந்த மார்ச் 3 மற்றும் 17 ஆகிய தேதிகளில் விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை மார்ச் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று (மார்ச் 27 ) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ”ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாகத் தான் அனுமதி மறுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்

இதற்கு, பொது பாதுகாப்பிற்குப் பாதிப்பு ஏற்படும் எனில் உரியக் கட்டுப்பாடு விதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பில், ஒரே நாளில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி தர முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக 5 இடங்களில் பேரணி நடத்துவதற்கு முதலில் அனுமதி வழங்கமுடியும்.

பேரணிக்கு முழு தடைவிதிக்கவில்லை. நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் பேரணி நடத்த சட்டத்தில் இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

மோனிஷா

சூரி குமரேசனா மாறிய கதை!

குரூப் 4 குளறுபடி: பிடிஆர் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share