ரூ.2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வங்கிகளுக்கு இன்று (மே 22) வழங்கியுள்ளது.
நாட்டில் அதிகரித்துள்ள கருப்பு பணத்தை ஒழிக்க சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆனால், எதிர்பார்த்ததைவிட இந்த நோட்டுக்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் குறைவாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதே முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து கடந்த 19ஆம் தேதி ‘தூய்மையான ரூபாய் தாள் கொள்கையின்படி’ இந்த ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மேலும் மே 23ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும், இந்த காலக் கெடுவுக்கு பின்னர் இந்த நோட்டுகள் செல்லாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்நிலையில் நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் பொதுமக்களுக்கு வங்கிகள் வழங்கவேண்டிய சேவைகளுக்கு சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி வங்கிகளுக்கு வரும் பொதுமக்கள் காத்திருப்பதற்கான பந்தல்கள், குடிநீர் வசதி, ஓய்வு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தினமும் எத்தனை 2,000 ரூபாய் தாள்கள் மாற்றப்படுகிறது என்று ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற போதிய ஏற்பாடுகள் செய்யப்படும். நாளை முதல் ரூபாய் நோட்டுகள் மாற்றுவதற்கான நடவடிக்கை தொடரும் நிலையில், 2000 ரூபாய் நோட்டுகள் வரும் செப்டம்பர் இறுதிவரை புழக்கத்தில் இருக்கும். எனவே நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் அவசரப்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா