உடல் எடையைக் குறைக்கச் சென்ற பெண்ணுக்கு முதுகு வலி : KOLORS நிறுவனத்துக்கு அபராதம்!

Published On:

| By Kavi

உடல் எடையைக் குறைப்பதற்காகச் சென்ற பெண்ணுக்கு முதுகு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து கலர்ஸ் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. s1.25 lakh fine slapped on slimming clinic kolors

உடல் எடை குறைப்பு நிறுவனமான கலர்ஸ், சென்னை, கோவை, நெல்லை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரெஜி என்பவர் அங்குள்ள கலர்ஸ் நிறுவனத்துக்கு எடை குறைப்புக்காகச் சென்றுள்ளார். 2 மாதத்தில் 30 கிலோ எடையைக் குறைக்கும் இயந்திர சிகிச்சைக்காக ரூ.90,000 செலுத்தியிருக்கிறார்.

ஒருசில நாட்கள் மட்டுமே இந்த சிகிச்சைக்காகச் சென்ற நிலையில் அவருக்குக் கடுமையான முதுகு வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்த போது, கலர்ஸில் இயந்திர சிகிச்சை அளிக்கப்பட்டதுதான் இந்த முதுகு வலிக்கு காரணம் என்பது தெரியவந்திருக்கிறது.

இதனால் ரெஜி, கலர்ஸ் நிறுவனத்துக்குச் சென்று, இனி நான் ட்ரீட்மெண்டுக்கு வரவில்லை… நான் கட்டிய பணத்தைத் திருப்பி கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் கலர்ஸ் நிறுவனம் அந்த பணத்தைத் தரவில்லை.

இதனால் முதுகு வலியோடு மன உளைச்சலுக்கு ஆளான ரெஜி நெல்லை நுகர்வோர் ஆணையத்தில் கலர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். அதில், கலர்ஸ் நிறுவனத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பைத் தொடர்ந்துதான் உடல் எடையை குறைக்க கலர்ஸ் நிறுவனத்துக்குச் சென்றேன். ஆனால் அங்கு எடுத்த சிகிச்சையின் காரணமாக முதுகு வலி வந்துவிட்டதால், ஒரு வாரம் கூட நான் சிகிச்சைக்காகச் செல்லாத நிலையில் என்னுடைய பணத்தை திரும்பிக் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நெல்லை நுகர்வோர் ஆணையம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவர் செலுத்திய தொகையான 90 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுக்க உத்தரவிட்டது. மேலும் வழக்கு செலவுக்காக ரூ.10000ம், அபராதமாக ரூ.25,000ம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. மொத்தமாக ரூ.1,25,000 ரூபாய் செலுத்த நெல்லை நுகர்வோர் ஆணையம் கலர்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. rs1.25 lakh fine slapped on slimming clinic kolors

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share