அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க, 860 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குப் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பணப்பலன்களை வழங்க, தமிழக அரசு பல்வேறு கட்டங்களாக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

அந்தவகையில் தற்போது, கடந்த 2024 மே முதல் ஜுலை வரை, ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், மரணமடைந்தவர்களுக்கும், பணப்பலன் வழங்க ரூ.860 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, மார்ச் 30, 2023 அன்று, ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற அல்லது இறந்த 3,414 பேருக்குப் பணப்பலன்கள் வழங்க ரூ.1,031.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், டிசம்பர் 2022 இல் ரூ.242.67 கோடியும், மார்ச் 27, 2023 அன்று ரூ.308.45 கோடியும் அடங்கும்.
ஜனவரி 27, 2025 அன்று, ஏப்ரல் 2023 இல் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குப் பணப்பலன் வழங்க ரூ.206.63 கோடி ஒதுக்கப்பட்டது. , ஆகஸ்ட் 10, 2024 அன்று, 2022 டிசம்பர் முதல் 2024 மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கும், 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரையிலான காலகட்டத்தில் இறந்த தொழிலாளர்களுக்கும் பணப்பலனில் ஒரு பகுதியாக (50% பி.எஃப்) ரூ.38.73 கோடி ஒதுக்கப்பட்டது.
அக்டோபர் 29, 2024 அன்று, சுமார் 10,000 ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குச் சேர வேண்டிய மொத்த ஓய்வூதியப் பலன்கள் ரூ.3,000 கோடி என மதிப்பிடப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு 1,279 தொழிலாளர்களுக்குப் பலனளிக்கும் வகையில் ரூ.372.06 கோடி ஒதுக்கியது.
இந்நிலையில் தற்போது 860 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது தமிழக அரசு.
