தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
அரியலூர் அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் இன்று (நவம்பர் 15) நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின், ‘ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரம் கிராமத்தில் டீன்ஷூஸ் நிறுவனத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.1,000 கோடி முதலீட்டில், 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த தொழிற்சாலை மிக விரைவில் திறப்பு விழா காணும் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இதனை டேக் செய்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று அறிவிப்புகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றுவதையே முழு நேரப் பணியாகச் செய்து வருகிறது திமுக அரசு. அதன் வரிசையில் இன்று, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், ரூ. 1,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியிருப்பதாக, முதலமைச்சர் பெருமைப்பட்டிருக்கிறார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், தைவான் நாட்டைச் சேர்ந்த காலணி நிறுவனம், ரூ. 2,302 கோடி முதலீடு செய்வதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவித்த திமுக அரசு, அதன் மூலம், 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவித்தது. சுமார் 20 மாதங்கள் கடந்தும், அந்தத் தொழிற்சாலை கட்டுமானத்துக்காக, ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது.
முதலமைச்சர் குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்று, ரூ. 6,000 கோடி முதலீடு ஈர்த்துள்ளோம் என்று கூறி ஆண்டுகள் இரண்டு ஆகின்றன. வெறும் ரூ.60 கோடி முதலீடு கூட இன்னும் தமிழகத்தை அடையவில்லை. இது போன்ற வீண் நாடகங்களை இனியாவது நிறுத்தி விட்டு, தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
லண்டனில் அரசியல் மேல் படிப்புக்காக சென்றுள்ள அண்ணாமலை அங்கிருந்தவாறு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
வரும் 28ஆம் தேதி அண்ணாமலை சென்னை திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கங்குவா முதல் நாள் கலெக்ஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அனுமதி இல்லாமல் ஆடியோ நாவல்… யூடியூப் சேனல் முடக்கம்… ராஜேஷ்குமார் வார்னிங்!