30,000 ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்துக்கு 3.2 லட்சம் ரூபாய் போக்குவரத்து விதிமீறல் அபராதம் விதிக்கப்பட்டதால் வாகனத்தை வைத்துக் கொள்ளுமாறு வாகன ஓட்டி கூறிய சம்பவம் போலீஸாரை அதிரவைத்துள்ளது. Rs 3.2 lakh fine for a two-wheeler
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் செயற்கை நுண்ணறிவு கொண்ட கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு கண்டறியப்படும் வாகன ஓட்டிகளின் வாகன எண்ணைக் கொண்டு உடனுக்குடன் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அபராதம் விதிக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் செல்போன் எண்ணுக்கு அது தொடர்பான தகவல்கள் வந்துவிடும்.
ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட வாகனங்களுக்கு, பதிவு செய்யும்போது மொபைல் எண் கொடுக்கும் வழக்கம் இருக்கவில்லை.
இதனால் பழைய வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் தொடர்பான தகவல்கள் செல்போன்களுக்கு வருவதில்லை.
இதனால் பலமுறை அபராதம் விதிக்கப்பட்ட பிறகு, போலீஸார் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களின் வீட்டுக்குச் செல்லும்போதுதான் அபராதம் விதிக்கப்பட்ட தகவலே தெரிய வருகிறது.
இதனால் பல லட்சம் ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.
அந்த வகையில் பெங்களூரு நகரின் சுதாமா நகரை சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர் தொடர்ந்து பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதால் செயற்கை நுண்ணறிவு கேமரா அவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அடுத்தடுத்து அபராதத்தை பதிவு செய்து வந்துள்ளது.
ஆனால் இது தொடர்பான தகவல் தெரியாததால் வாகன உரிமையாளர் அந்த அபராத தொகையை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தனக்கு அபராதம் விழுந்தது தெரியாததால் அவர் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு அபராத தொகையாக 3.2 லட்சம் ரூபாய் சேர்ந்ததை அடுத்து காவல்துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு நேரில் சென்று அபராத தொகையை செலுத்துமாறு கேட்டுள்ளனர்.
அப்போதுதான் தனக்கு இந்த அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டதே அந்த நபருக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது வாகனத்தின் மொத்த மதிப்பே 30,000 ரூபாய் தான் என்பதால் தனது வாகனத்தை எடுத்துக் கொள்ளுமாறு போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் மேலதிகாரிகளிடம் பேசி அபராதத் தொகையை தவணை முறையில் செலுத்துமாறு வாகன உரிமையாளருக்கு அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு செலுத்தாவிட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
தற்போது இந்த சம்பவம் பெங்களூரு நகரைச் சேர்ந்த வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: கடுக்காய் பொடி சாப்பிட்டால் முதுமைத்தோற்றம் விலகுமா..?
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: டிரெண்டாகி வரும் ‘100 Times Washed Ghee’ எல்லாருக்கும் ஏற்றதா?
Rs 3.2 lakh fine for a two-wheeler