புதுச்சேரி பெண்ணிடம் 18 லட்சம் ரூபாய் பறித்த ஆன்லைன் டிரேடிங் கும்பலை அம்மாநில சைபர் க்ரைம் கூண்டோடு பிடித்துள்ளது.
வீட்டில் இருந்தபடியே க்ரிப்டோ கரன்சி போன்ற ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என்று சோசியல் மீடியாக்களில் விளம்பரப்படுத்தி அதன்மூலம் ஆசையை தூண்டி மக்களிடத்தில் பணம் பறிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் மக்களை லட்சக்கணக்கில் முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் ஏமாற்றி வந்த கும்பலை கூண்டோடு பிடித்திருக்கின்றனர் புதுச்சேரி போலீசார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா, ஆன்லைன் டிரேடிங்கில் ஏமாந்து 18 லட்சம் வரை இழந்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸாரிடம் கோகிலா புகார் அளித்த நிலையில், அந்த மோசடி கும்பலை கூண்டோடு பிடித்துள்ளனர்.
இதுபற்றி புதுச்சேரி சைபர் க்ரைம் பிரிவு எஸ்எஸ்பி கலைவாணன் தலைமையில் அமைக்கப்பட்ட ஸ்பெஷல் டீமில் உள்ள போலீஸ் அதிகாரி கூறுகையில்,
“கோகிலா, ஆன்லைன் டிரேடிங்கில் தன்னிடம் 18 லட்சம் ரூபாயை ஒரு கும்பல் ஏமாற்றிவிட்டதாக கடந்த ஜூலை 1 ஆம் தேதி, புகார் கொடுத்தார்.
இந்த புகாரை தொடர்ந்து எங்கள் சீனியர் எஸ்.பி.கலைவாணன் ஐபிஎஸ் விசாரணையை தீவிரப்படுத்தினார்.
கோகிலாவுக்கு டிரேடிங் மெசேஜ் வந்ததை வைத்து தொழில்நுட்ப ரீதியாகவும் நேரடியாகவும் விசாரணை செய்தார். அவர் தொழில்நுட்பம் பற்றி நன்கு அறிந்தவர் என்பதால், வாட்ஸ்அப் ஐபியைக் கண்டுபிடித்து, எஸ்பி பாஸ்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் கீர்த்தி ஆகியோர் தலைமையில் ஸ்பெஷல் டீமை களத்தில் இறக்கினார்.
முதல்கட்டமாக அன்சார் முஹம்மது என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பெங்களூருவில் இருந்த அன்சார் முஹம்மதுவை அவரது வீட்டில் வைத்து ஸ்பெஷல் டீம் போலீசார் கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டு பின்னணியில் உள்ளவர்களையும் கை கைகாட்டினார்.
உடனே பெங்களூர் போலீஸ் ஒத்துழைப்புடன் பெங்களூர் ராமமூர்த்தி நகரில் உள்ள Global software solution, Algomaster trading, Gleam global service அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து போலீசார் விசாரித்தனர்.
இந்நிறுவனங்களின் உரிமையாளரான தூபைல் அகமதுவிடம் விசாரித்தபோது, “சார் நாங்கள் சட்டப்படி இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம்” என அதட்டலாக சொன்னார்.
உடனே எங்கள் டீம் அதிகாரி, சரி நீங்கள் டிரேடிங் செய்வதற்கு செபியில் உறுப்பினராக சேர்ந்துள்ளீர்களா என கேட்டதும் திருடனுக்கு தேள் கொட்டியதுப்போல் முழித்தார்.
நாங்கள் டிரேடிங் செய்யவில்லை அதற்கான ஆட்டோமேட்டிக் சாப்ட்வேர் விற்பனை செய்கிறோம் என்றதும், அவரை போலீஸ் வேனுக்குள் இழுத்து வர சொன்னார் எஸ்எஸ்பி.
அதன்படி, தூபைல் அகமதுவையும் மற்ற சிலரையும் பிடித்து வந்து வேனில் ஏற்றி புதுச்சேரி நோக்கி வந்தோம். வண்டியில் வரும்போது, ‘சார் பல மாநிலங்களில் இருந்து புகாருடன் போலீசார் வருவார்கள். புகார் கொடுத்தவருக்கு அவரது பணத்தை செட்டில் செய்துவிட்டு விசாரணைக்கு வந்த போலீஸுக்கும் நிறைவாக கொடுப்போம்.
நீங்கள் என்னன்னா, எங்கள் மீது வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பப்போறீங்க, ப்ளீஸ் சார் அந்த கம்பளைன்ட் பார்ட்டிக்கு செட்டில்மென்ட் செய்கிறேன். நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு கோடிகளைத் தருகிறோம்’ என்றார் தூபைல் அகமது,
ஆனால், சீனியர் எஸ்பி கலைவாணன் மக்களிடம் ஏமாற்றிய பணத்தை மக்களிடமே கொடுத்துவிடு… அப்போதுதான் உன்னோட குடும்பம் நல்லாயிருக்கும் என்று போலீஸ் பாணியில் கவனித்தார்.
தொடர்ந்து, தூபைல் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச் கேட் எதிரில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள என்.டி.எஸ். அலுவலகத்தில் நுழைந்து போலீசார் விசாரித்தனர்.
அங்கிருந்த சாப்ட்வேர், ஹார்ட் டிஸ்க், சொகுசு கார்கள், பைக், பஸ், வேன் போன்ற வாகனங்களையும், சில ஊழியர்களையும் கைது செய்து வந்தனர்.
அவர்களைக் காப்பாற்ற பல வழக்கறிஞர்கள் முயன்றனர். ஆனால் பலன் இல்லை. காரணம், சீனியர் எஸ்பி கலைவாணன் மற்றும் எஸ்பி பாஸ்கர் இருவரும் நேர்மையான அதிகாரிகள்” என்றார்.
இதைப்பற்றி சீனியர் எஸ்.பி கலைவாணனிடம் கேட்டோம். “தூபைல் அகமது மற்றும் அவரது சகோதரர் நவ்ஷத் கான் அகமது ஆகிய இருவரும் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர்கள். கடலூர் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக்கில் படித்தவர்கள். நவ்ஷத் கான் நல்ல கம்யூட்டர் நாலேஜ் உள்ளவர்.
துபாயில் க்ரிப்டோ டிரேடிங் நடப்பதை பார்த்து இந்தியாவில் டிரேடிங் செய்து மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில், துபாய், தமிழ்நாடு நெய்வேலி, கர்நாடகா பெங்களூர், மும்பை, ஹாங்காங், தாய்லாந்து, போன்ற நாடுகளில் கால்சென்டர்கள் அமைத்திருக்கின்றனர்.
200க்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்து 40 ஆயிரம் முதல் 2 லட்சம் வரையில் சம்பளம் கொடுத்து வந்துள்ளனர். மக்களை ஏமாற்ற பயன்படுத்திய கால்சென்டர்கள் அவர்கள் ரிஜிஸ்டர் செய்த இடத்தில் எங்கும் இயங்கவில்லை, அந்த சென்டர்களைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வெளிநாட்டு இன்டர்நெட் பயன்படுத்தியுள்ளனர்.
கடந்த 9 மாதங்களில் மூன்று வங்கி கணக்கில் மட்டும் 56 கோடி ரூபாய் வந்துள்ளது. மேலும் இவர்களிடம் இந்தியாவில் மட்டும் 1 லட்சத்து 57 ஆயிரத்து 346 நபர்களின் விபரங்களை இணையதளம் மூலம் பெற்று வைத்துள்ளனர்.
இந்த நிறுவனத்தை 2014 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தூபைல் அகமது, பிரவீன், ஜெகதீஷ், அன்சார், ராமசந்திரன், பிரேம், ஆனந்த், விமல்ராஜ் ஆகியோரை கைது செய்துள்ளோம். துபாயில் தலைமறைவாக உள்ள நவ்ஷத் கான் மற்றும் அவரது மனைவியை கைது செய்யத் தேடி வருகிறோம்.
இவர்கள், கோடிக்கணக்கில் சொத்துகள் வைத்துள்ளனர். பெங்களூர் ஏற்காடு, புதுச்சேரி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் சொகுசு பங்களா மற்றும் ரிசார்ட் வைத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
அவரிடம் , ஆன்லைன் டிரேடிங் மூலம் மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்று கேட்டோம்.
“ஏமாறுபவர்கள் பெரும்பாலும் படித்த அறிவாளிகள்தான். காரணம் அவர்களின் பேராசை. இதைப் பயன்படுத்தி ஏமாற்றுகிறது இதுபோன்ற கூட்டம்.
நெய்வேலியில் உள்ள கால்சென்டர்களின் வேலை சோசியல் மீடியாக்களில் டிரேடிங் சம்பந்தமாக தேடுபவர்கள் டேட்டாவை எடுத்து பெங்களூர் கால் சென்டருக்கு அனுப்பி வைப்பார்கள், அவர்கள் பெங்களூருவில் இருந்து, டிரேடிங் தொடர்பாக இணையத்தில் தேடுபவர்களை தொடர்புகொண்டு பேசுவார்கள்.
‘எங்களிடம் டிரேடிங் செய்வதற்கான ஆட்டோமேட்டிக் சாப்ட்வேர்கள் இருக்கிறது. அதை வாங்கி அப்டேட் செய்தால் நன்கு சம்பாதிக்கலாம்’ என்று மூளை சலவை செய்வார்கள்.
இதில் விருப்பப்பட்டவர்கள் மோசடி நிறுவனத்தின் UPI IDக்கு பணம் அனுப்புவார்கள். பணத்தை பெற்றுக்கொண்டு அந்நிறுவத்தினர் சிலருக்கு சாப்ட்வேர் அனுப்புவார்கள். பலருக்கு அதையும் அனுப்பமாட்டார்கள். அனுப்பிய சாப்ட்வேரும் போலியாக இருக்கும். இப்படித்தான் பல லட்சம் பேர் பல ஆயிரம் கோடிகளை இழந்துள்ளனர்.
ஏமாந்து போனவர்கள் மீண்டும் அவர்களைத் தொடர்பு புகொள்ள முடியாது. பொதுமக்கள்தான் உஷாராக இருக்க வேண்டும், ஆன்லைன் டிரேடிங்கில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம், இன்று சைபர் க்ரைம் அதிகரித்து வருகிறது. அவர்களைக் கண்டுபிடிக்க காவல் துறையும் டெக்னாலஜியில் வளர்ந்து வருகிறது” என்றும் தெரிவித்தார்.
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ஆறு மாதம் தான் தாக்குப்பிடிக்கும்”… மூன்றாவது முறையாக விஜய்யை டார்கெட் செய்யும் அமைச்சர்!
ரூ.32 கோடி மதிப்பு… பங்களாவை விற்பனை செய்த கங்கனா
இந்தியாவின் இட ஒதுக்கீடு : ராகுலுக்கு அமித்ஷா பதில்!
விவாகரத்து : ஜெயம் ரவி முடிவால் அதிர்ச்சி… யார் இந்த ஆர்த்தி? குடும்ப பின்னணி என்ன?
வழக்கு நிலுவையில் இருந்தாலும் பத்திரப்பதிவு செய்யலாம் : பதிவுத்துறை உத்தரவால் சர்ச்சை!
மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்!