நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் டிட்வா புயல், வடகிழக்கு பருவமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை மறுசீரமைக்கும் பணிகளுக்காக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சாலைகள் பல, டிட்வா புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சேதமடைந்துள்ளன.
இந்தநிலையில், “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களின் போதும், சிறப்பு வார்டு சபா கூட்டங்களின்போதும் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைக்கக் கோரி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
எனவே, சாலைகளை மறுசீரமைக்க அரசு அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து இன்று (ஜனவரி 22) வெளியிட்ட அறிவிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சி. இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் சேதமடைந்த சாலைகளை ரூ.1503.78 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
ஏற்கனவே அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.3750 கோடி செலவில் புதிய சாலைகளை அமைத்திடவும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும் பணிகள் மேற்கொள்ள அரசு ஆணை பிறப்பித்து பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதுவரை 2025-26-ம் ஆண்டில் மட்டும் நகர்ப்புற சாலைகளின் மேம்பாட்டிற்காக ரூ.5.253.78 கோடியினை அரசு வழங்கி உள்ளது. இதன் காரணமாக நகர்ப்புற சாலைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு மேம்பட்டு, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். சாலைவழி பயணம் எளிதாக அமையும்” என்று கூறப்பட்டுள்ளது.
