கூகுள் நிறுவனத்துக்கு இந்திய வணிக போட்டி அமைப்பு (சிசிஐ) விதித்த ரூ.1,337.76 கோடியில் 10 சதவீதத்தை மட்டும் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) நேற்று (ஜனவரி 4) உத்தரவிட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் செயலிகளான கூகுள் சர்ச், கூகுள் குரோம், யூடியூப், கூகுள் மேப், கூகுள் பிளே ஸ்டோர் ஆகியவற்றை அந்நிறுவனம் செல்போனில் முன்கூட்டியே நிறுவி விற்பனைக்கு அனுப்புவதால் பிற போட்டியாளர்கள் பாதிக்கப்படுவதாக சிசிஐ அமைப்பு கடந்த ஆண்டு குற்றம்சாட்டியது.
இதனால் பிற ஆண்ட்ராய்டு மொபைல் நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்பட்டு கூகுள் நிறுவனம் மட்டுமே பெரும்பான்மையான வருவாய் மற்றும் கமிஷன் பெறுகிறது. தனது மேலாதிக்க நிலையில் துஷ்பிரயோகம் செய்தது மட்டுமின்றி வணிகத்தில் ஆரோக்கியமான போட்டியை குந்தகம் விளைவித்துள்ளது என்று சிசிஐ குற்றம்சாட்டியது.

இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337 கோடி அபாரதம் விதித்து சிசிஐ உத்தரவிட்டது. மேலும் ”வணிகத்தில் பல்வேறு நிறுவனங்களின் போட்டிக்கு எதிரான நடைமுறைகளில் பங்கேற்பதை நிறுத்தவும் கூகுள் நிறுவனத்திற்கு சிசிஐ அறிவுறுத்தியது.
இந்த உத்தரவை எதிர்த்து, கூகுள் நிறுவனம் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இதனை தொடர்ந்து தேசிய கம்பெனிச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதிபதிகள் ராகேஷ் குமார், அலோக் ஸ்ரீவஸ்தவா அமர்வு முன்பாக நேற்று வழக்கு விசாரணை நடைபெற்றது.
அப்போது, கூகுள் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடினார். அவர், ”ஆண்ட்ராய்டு மொபைல் சாதன தயாரிப்பாளர்கள் மீது சட்ட விரோதமான கட்டுப்பாடுகளை விதித்ததாகக் கூறி கூகுளுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஆணையத்தின் உத்தரவை அப்படியே சிசிஐ காப்பி பேஸ்ட் செய்துள்ளது.
இந்த உத்தரவின் மூலம் 2005 முதல் இருந்த நிலையை மாற்றுகிறார்கள். இதனால் சிசிஐ உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். கூகுள் நிறுவனம் விதிமுறைகளை மீறியதற்கு ஆவணங்கள் இல்லை” என்று சிங்வி வாதிட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராகேஷ் குமார், அலோக் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் தங்களது தீர்ப்பில், இந்திய வணிகப் போட்டி அமைப்பு விதித்த உத்தரவுக்கு உடனடியாக எந்தத் தடையும் விதிக்க முடியாதென மறுத்துவிட்டனர்.
மேலும் ”இந்திய வணிகப் போட்டியின் முறையீடுகளையும் நாங்கள் கேட்க வேண்டும். இடைக்கால உத்தரவை வழங்குவதற்கு முன்பே, நாங்கள் விஷயத்தைப் புரிந்துகொள்ள பதிவேடுகளைப் பார்க்க வேண்டும். அரை மணி நேரம் உங்களின் வாதம் கேட்ட பிறகு நாங்கள் உத்தரவை அனுப்புவோம் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதேநேரம், ” இடைக்கால நடவடிக்கையாக சிசிஐ விதித்த அபராதத் தொகை ரூ.1,337 கோடியில் 10 சதவீதம் மட்டும் என்சிஎல்ஏடி பதிவாளரிடம் டெபாசிட் செய்ய வேண்டும். மேலும் வரும் பிப்ரவரி 13ம் தேதிக்குள் இந்திய வணிகப் போட்டி தனது பதிலை தாக்கல் செய்ய வேண்டும்” என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா