சிறப்பு பூஜை நடத்தியும் பயனில்லை… 6 சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.11.93 லட்சம் சிக்கியது! 

Published On:

| By christopher

ஆறு சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று (செப்டம்பர் 16) நடத்திய அதிரடி சோதனையில் மொத்தம் 11 லட்சத்து 93 ஆயிரத்து 310 ரூபாய் சிக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ள நிலையில், சிலவற்றில் முறைகேடுகளும் மற்றும் அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து நேற்று ஆறு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதன்படி வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்க நகர் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர்களை வைத்து கூடுதலாக பணம் வசூலிப்பதாக வந்த தகவலின் பேரில், 11 பேர் கொண்ட வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத 43 ஆயிரத்து 620 ரூபாய் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில்  கணக்கில் வராத 2 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இங்கு தான் சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்க கூடாது என்பதற்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 3 ஆயிரத்து 280 ரூபாய் கைப்பற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத 94 ஆயிரத்து 570 ரூபாயும் கைப்பற்றப்பட்டது.

சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.. ரூ.11.93 லட்சம் சிக்கியது! - DVAC raid in sub registrar office

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளர் கீதா உள்ளிட்டோர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத 3 லட்சத்து 71 ஆயிரத்து 840 ரூபாயும் கைப்பற்றப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் காடாம்புலியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒரே நாளில் அதிரடியாக நடத்தப்பட்ட இந்த சோதனையின் மூலம்,  6 சார் பதிவாளர் அலுவலகங்களில் இருந்து மொத்தம் 11,93,310 ரூபாய் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

திமுக பவள விழா : தொண்டர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share