திரிஷா விவகாரம் – ரூ. 1 லட்சம் அபராதம்: மன்சூர் அலிகானுக்கு தடை விதிக்க மறுப்பு!

Published On:

| By Kavi

high court order to mansur alikhan

high court order to mansur alikhan

நடிகர் மன்சூர் அலிகான் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

லியோ படத்தில் நடித்ததை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா தொடர்பாக பேசிய பேச்சு கண்டனத்துக்கு உள்ளானது.

இனி மன்சூர் அலிகானுடன் நடிக்கமாட்டேன் என்று திரிஷா அறிவித்தார். தேசிய மகளிர் ஆணையர் உறுப்பினர் குஷ்பு உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், “மன்னித்துவிடு திரிஷா” என மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். இதை ஏற்று மன்னித்துவிட்டதாக திரிஷாவும் கூறினார்.

இந்தசூழலில் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம்சாட்டி, நடிகை திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா 1 கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் திரிஷா தானே வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தது.

அதோடு நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக கூறி மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த தொகையை சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 10ஆம் தேதி நடந்த விசாரணையில் மன்சூர் அலி கான் தரப்பில், அபராதத் தொகையை செலுத்த 10  நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.

இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் மன்சூர் அலிகான்.

இந்த மனு இன்று (ஜனவரி 31) நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஷபிக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “அபராத தொகையை செலுத்துவதாக தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு, கால அவகாசமும் பெற்றுவிட்டு, தற்போது அதை எதிர்த்து எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும்” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், “அந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி தனி நீதிபதி முன் வலியுறுத்தலாம் அல்லது பணத்தை கட்ட முடியுமா, முடியாதா என்ற விவரத்தை தெரிவிக்கலாம்” எனக் கூறி வழக்கை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஐஜி-க்கள் பணியிட மாற்றம்!

பெண் நிர்வாகி மீது தாக்குதல்: அமர்பிரசாத் ரெட்டி முன் ஜாமீன் மனு!

high court order to mansur alikhan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share