இன்று (மார்ச் 19) நடைபெறவிருந்த ஆர்.ஆர்.பி லோகோ பைலட் தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். RRB Loco pilot Exam
இந்திய ரயில்வே துறையில், வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. சமீபத்தில் ரயில்வே துறையில் காலியாக உள்ள 18,799 லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான முதற்கட்ட எழுத்து தேர்வில் 25,271 பேர் தேர்ச்சியடைந்தனர். இவர்களுக்கான இரண்டாம் நிலை எழுத்து தேர்வு இன்று நடைபெற இருந்தது.

முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வுக்கு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து விளக்கமளித்த ஆர்.ஆர்.பி, அனைத்து தேர்வர்களுக்கும் சொந்த மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்க முடியாததால் அண்டை மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
இந்தநிலையில், நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து தெலங்கானா, ஆந்திராவிற்கு தேர்வு எழுத சென்ற தேர்வர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், கடைசி நேரத்தில் தேர்வை ரத்து செய்துள்ளது ஆர்.ஆர்.பி. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள ஆர்.ஆர்.பி, புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து 1,000 கி.மீ கடந்து சென்று தெலங்கானா, ஆந்திராவிற்கு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வளவு தூரம் சென்று தேர்வெழுத வேண்டுமா என்று எண்ணி சில தேர்வர்கள் தேர்வு எழுத செல்லவில்லை.
லோகோ பைலட் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மதுரை சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் , “தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்ததிருந்த போதும் மிகுந்த சிரமத்துடன் இன்று தேர்வு எழுத சென்றவர்களை அலைக்கழித்துள்ளது ரயில்வே துறை.
எதிர்கால கனவுடன் தேர்வு எழுதச் சென்ற இளைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை சிதைக்கின்றது ஒன்றிய ரயில்வே துறை. இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மனவுளைச்சலுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சு.வெங்கடேசன், “வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய ஒரு தேர்வு வாரியம், தேர்வர்களுக்கான குறைந்தபட்ச வாழ்வியல் தேவையையும் சூறையாடுகிறது. இது ரயில்வே தேர்வு வாரியத்தின் மீதான நம்பிக்கையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது.
இதனை ஒரு போதும் ஏற்கமுடியாது. பிற மாநிலங்களுக்கு தேர்வு மையம் வரை சென்று திரும்பிய தேர்வர்கள் செலவு செய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக ரயில்வே வாரியம் வழங்க வேண்டும். எனவே இதன் பின்னர் அறிவிக்கப்பட உள்ள தேர்வையாவது தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையம் அமைத்து நடத்தப்படுவதை ரயில்வே அமைச்சகமும் , ரயில்வே தேர்வு வாரியமும் உறுதிபடுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Loco pilot Exam