டாஸ்மாக்கில் காவலர் முத்துக்குமாரை அடித்துக்கொன்ற கஞ்சா வியாபாரி பொன்வண்ணனை போலீசார் இன்று (மார்ச் 29) சுட்டுப் பிடித்துள்ளனர். rowdy encounter who killed police
மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 27ஆம் தேதி பணி முடிந்து முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது, கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பொன்வண்ணன் மற்றும் அவரது நண்பர்களுக்கு அறிவுரை கூறினார்
அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்கள், முத்துக்குமாரை கல்லால் அடித்து தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமுற்ற முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த உசிலம்பட்டி காவல்நிலைய போலீசார், தப்பி ஓடிய பொன்வண்ணன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வந்தனர்.
மேலும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் அருகே பொன்வண்ணன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி வருசநாடு பகுதியில் இருந்து இன்று கேரளா தப்பிக்க முயற்சித்த அவரை உசிலம்பட்டி நகர காவல்நிலைய ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் போலீசார் பிடிக்க முயன்றனர்.
இந்த நிலையில் தன்னை பிடிக்க வந்த போலீசாரை, பொன்வண்ணன் தாக்கிவிட்டு தப்ப முயற்சித்த நிலையில், அவரை சுட்டு பிடித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
