கால்பந்து ஜாம்பவான் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். இவர், கால்பந்து வரலாற்றில் 5 முறை பல்லான் டிஆர் விருதை வென்றவர். சோசியல் மீடியாவில் அதிகளவில் ரசிகர்கள் கொண்டுள்ள விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் இருக்கிறார்.
எக்ஸ் தளத்தில் 112.5 மில்லியன் ரசிகர்களும், ஃபேஸ்புக்கில் 170 மில்லியன் ரசிகர்களும், இன்ஸ்டாவில் 636 மில்லியன் ஃபாலோயர்களும் உள்ளனர். ரொனால்டோ பதிவிடும் ஒரு இன்ஸ்டா பதிவுக்கு ரூ.26.7 கோடி கிடைக்கிறது.
இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது யூ-டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இதனை எக்ஸ் தளத்தில் ரொனால்டோ அறிவித்த சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர தொடங்கினர். இந்த சேனல் தொடங்கப்பட்ட 90 நிமிடங்களில் 10 லட்சம் சப்ஸ்கிரைபர்கள், 6 மணி நேரத்தில் 40 லட்சம் ரசிகர்கள் என 24 மணி நேரத்தில் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்கள் ரொனால்டோவுக்கு கிடைத்துள்ளனர்.
முன்னதாக, Hamster Kombat Video game தொடங்கிய போது 7 நாட்களில் அந்த சேனலுக்கு 1 கோடி சப்ஸ்கிரைபர்கள் கிடைத்ததே சாதனையாக இருந்தது. யூடியூப் தொடங்கிய பிறகு, ரொனால்டோ 11 ஷார்ட் வீடியோக்களை வெளியிட்டு ஆச்சரியம் கொடுத்தார். அவை மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆகும்.
அதேபோல் இந்த யூடியூப் சேனலில் ரொனால்டோவுக்கு மிகவும் பிடித்த கால்பந்து விளையாட்டு பற்றி விவாதிப்பார் என்று தெரிகிறது. அதேபோல் ரொனால்டோவுக்கு பிடித்த விஷயங்கள், குடும்பம், உடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் தொழில் ஆகியவை குறித்தும் பேசவுள்ளார். ரொனால்டோ தனது சேனலுக்கு சிறப்பு அழைப்பாளர்களையும் அழைத்து விவாதம் நடத்தவும் வாய்ப்புள்ளது.
ஓய்வை நெருங்கி விட்ட ரொனால்டோ சவுதி பிரீமியர் லீக் தொடரில் இருந்து மீண்டும் ஐரோப்பா லீக் தொடருக்கு திரும்ப வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
ரொனால்டோவின் தாய் ஏழ்மை காரணமாக கருவில் இருந்த ரொனால்டோவை கருவிலேயே கலைக்க முயன்றுள்ளார்.அதற்காக, மாத்திரையும் சாப்பிட்டுள்ளார். ஆனால், கரு கலையவில்லையாம். இதை முன்பு அவரே பொதுவெளியில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அந்த குழந்தைதான், இப்போது ரொனால்டோவாக மாறி மாயாஜாலம் செய்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மிதமான மழைதான்…மக்களே ரிலாக்ஸ்!
விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம்… பகுஜன் சமாஜ் எதிர்ப்பு!