நினைவலைகளை மீட்டும் ‘ரோஜாக் கூட்டம்’!

Published On:

| By Selvam

Roja Kootam movie special article

ஒரு திரைப்படம் ஏன் ஒருவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது? எது அதனை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது, நம் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடிக்கச் செய்கிறது? அப்படத்தின் கதை, வசனம், பாடல்கள், சண்டைக்காட்சிகள், நடனம் மற்றும் அதில் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று ஏதோ ஒரு அம்சம் பின்னணியில் இருக்கும்.

சில வேளைகளில், அந்த காலகட்டத்தில் நமது மனநிலையை ஏதோ ஒருவகையில் அத்திரைப்படம் ஆக்கிரமித்ததும் கூட ஒரு காரணமாக இருக்கும். அப்படி எண்பதுகள், தொண்ணூறுகளில் பிறந்தவர்களின் நினைவுகளோடு கலந்துவிட்ட திரைப்படங்களில் ஒன்று ‘ரோஜாக் கூட்டம்’. திகட்டத் திகட்டக் காதல் எனும் அளவுக்கு, இப்படம் முழுக்க அதையே நிறைத்திருப்பார் இயக்குனர் சசி.

ADVERTISEMENT

இரண்டாவது படம்!

ADVERTISEMENT

தான் காதலித்த பெண்ணிடம் சொன்ன பொய்யை உண்மையாக்குவதற்காகத் தன்னை ஊனம் ஆக்கிக் கொண்ட மனிதனொருவனின் காதலை ‘சொல்லாமலே’வில் சொல்லியிருந்தார் இயக்குனர் சசி. பிறகு அதனைத் தெலுங்கிலும் இயக்கினார். தமிழில் அவரது இரண்டாவது படமாக அமைந்தது ‘ரோஜாக் கூட்டம்’. அதில் தெலுங்கு நடிகர் தருண், கொரியோகிராஃபர் ஷோபி பவுல்ராஜ் என்று இப்படத்திற்காகப் பரிசீலிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசம். ஆனாலும், இக்கதை திரை வடிவம் நோக்கி நகரவில்லை.

அந்த காலகட்டத்தில், கே.பாலச்சந்தரின் தொலைக்காட்சித் தொடரில் நடித்த அனுபவத்தோடிருந்த மாடலிங் கலைஞர் ஸ்ரீகாந்தை நாயகனாகத் தேர்வு செய்தார் சசி. ’பத்ரி’, தெலுங்கு ‘குஷி’யில் நடித்து அன்றைய தலைமுறையைக் கவர்ந்த பூமிகா நாயகி ஆனார். ராதிகா, ரகுவரன், விவேக், ரேகா, ஜெய் ஆகாஷ், விஜய் ஆதிராஜ் உட்படப் பெரியதொரு நட்சத்திரப் பட்டாளமும் படத்தில் இருந்தது.

ADVERTISEMENT

படம் வளரும்போதே தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் ஏற்பட்ட சிறு பிரச்சனையின் காரணமாகப் படப்பிடிப்பு நின்றது. சில பல சமாதானங்களுக்குப் பிறகே அது தொடர்ந்தது.

முதல் படத்தில் அசாதாரணமான காதலைச் சொன்ன இயக்குனர் சசி, இதில் மிகச்சாதாரணமான ஒரு இளைஞரின் காதலைக் குடும்ப உறவு, நட்பு பின்னணியில் சொல்லியிருந்தார். முதல் பார்வையிலேயே அந்தப் பெண்ணின் மீதி அவர் காதலில் விழுவதில் இருந்து திரைக்கதையைத் தொடங்கியிருந்தார்.

பெற்றோர் தனது ஒரே மகன் மீது காட்டும் பாசமும், நட்புக்காகத் தன் காதலையே விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கும் அவ்விளைஞரின் தியாகமும் இதன் மையமாக இருந்தன. அப்போதைய ட்ரெண்டுக்கு தகுந்தபடி, விவேக்கின் ‘காமெடி ட்ராக்’ திரைக்கதையின் ஊடே இடம்பெற்றது. நாயகனின் நண்பனாக, ஒரு ஆட்டோ ஓட்டுநராக இதில் அவர் நடித்திருந்தார்.

2002, பிப்ரவரி 22 அன்று தியேட்டர்களில் வெளியானது. ‘சுமாரா இருக்கு’, ‘ஓகே’, ‘ஒரு தடவை பார்க்கலாம்’ என்று கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேநேரத்தில், ஒரு மென்மையான ‘ரொமான்ஸ் ட்ராமா’ என்று சிலரால் கொண்டாடப்பட்டது. விவேக், சொர்ணா இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பாகின.

அதையும் தாண்டி ‘ரோஜாக் கூட்டம்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதற்கு பரத்வாஜ் தந்த இசையும், பாடல் காட்சிகளில் தோன்றிய ஸ்ரீகாந்த், பூமிகாவின் அழகுத் தோற்றமும் காரணமாக இருந்தன.

இந்திப்பட பாடல்களின் தாக்கம்!

2000-க்கு முன்பாக ஷாருக்கான் நடிப்பில் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’, ‘தில் தோ பாஹல் ஹை’, ‘குச் குச் ஹோதா ஹை’ என்று அடுத்தடுத்து காதல் படங்கள் வெளியாகின. சல்மான்கான், அஜய் தேவ்கன், பாபி தியோல் என்று பலரும் அப்படிப்பட்ட படங்களைத் தந்தனர். அப்படங்களின் இசையும் பெரிதாகக் கொண்டாடப்பட்டது. கிட்டத்தட்ட அவ்விசையின் தாக்கத்தினை ‘ரோஜாக் கூட்டம்’ படப் பாடல்களில் உணர முடியும்.

Roja Kootam movie special article

‘ஆப்பிள் பெண்ணே நீ  யாரோ’, ‘மொட்டுகளே மொட்டுகளே’, ‘அண்ணா சாலையில்..’, ‘புத்தம் புது ரோஜாவே’ பாடல்கள் இனிமையான மெலடிகளாக அமைந்தன. இது போக ‘வைப்’ செய்வதற்கு ஏற்றதாக மாணிக்க விநாயகம், மால்குடி சுபா குரலில் ‘சுப்பம்மா’வும், திப்பு பாடிய ‘அழகின் அழகே’வும் இருந்தன.

இயக்குனர் சரண் படங்களில் மட்டுமே அசத்தல் பாடல்களைத் தருவார் என்று இசையமைப்பாளர் பரத்வாஜின் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்ட நிலையில், இதில் ஏழு பாடல்களையும் அவர் ‘ஹிட் லிஸ்டில்’ இடம்பெறச் செய்தார். கிட்டத்தட்ட படத்திற்கான ‘விசிட்டிங் கார்டாக’ அவரது இசையே அமைந்தது.

விளம்பரப் படம் பார்ப்பது போன்று, திரையில் அழகியல் அம்சங்களை வாரி இறைத்திருந்தார் ஒளிப்பதிவாளர் எம்.பன்னீர்செல்வம். கிறுகிறுக்க வைக்கும் ‘கிளைமேக்ஸ்’ தவிர்த்து, மற்ற காட்சிகளை ‘செறிவாக’ அமையுமாறு ‘கட்’ செய்திருந்தார் படத்தொகுப்பாளர் பீட்டர் பாபியா.

எடுத்துக்கொண்ட கதைக்குத் தகுந்தவாறு, புத்துணர்வூட்டும் காதலொன்றைத் திரையில் சொல்லியிருந்தார் இயக்குனர் சசி. வலுவான கதையில்லாமல் திரைக்கதையின் பலத்தை நம்பி அவர் இயக்கிய படமும் இதுவே. தொடர்ந்து ’டிஷ்யூம்’, ‘பூ’, ’555’, ’பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று வெவ்வேறு வகைமைகளில் மட்டுமே படம் இயக்குவது என்பதில் உறுதியாக நிற்கிறார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளில் எட்டு படங்களே இயக்கியிருக்கிறார்.

‘ரோஜாக் கூட்டம்’ போல இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு தற்போது ‘நூறு கோடி வானவில்’ எனும் காதல் படமொன்றை மீண்டும் உருவாக்கி வருகிறார் சசி.

நல்லதொரு அறிமுகம்!

‘துள்ளுவதோ இளமை’யில் தனுஷ், ‘ஜெயம்’ படத்தில் ரவி, ‘12பி’யில் ஷாம், ’ஆசை ஆசையாய்’ படத்தில் ஜீவா என்று இளம் நாயகர்கள் அறிமுகமான காலகட்டம் அது.

‘அலைபாயுதே’, ‘மின்னலே’ படங்களில் மாதவனும், ‘உன்னை நினைத்து’, ’மௌனம் பேசியதே’ படங்களில் சூர்யாவும் காதல் நாயகர்களாகத் தங்களை உருமாற்றிக் கொண்ட காலமது. அஜித்தும் விஜய்யும் காதல், குடும்ப செண்டிமெண்ட் கலந்த படங்களைத் தாண்டி ஆக்‌ஷன் நோக்கிப் பயணிக்கத் தொடங்கியதும் அப்போதுதான். அரவிந்த் சாமி உட்படப் பல ‘காதல் மன்னர்’கள் தங்களது கிரீடங்களைக் கழற்றிவைத்துவிட்டுச் சென்றதும் அக்காலகட்டத்தில்தான். அப்போதைய சூழலில் ஸ்ரீகாந்தின் வரவு பெரிய எதிர்பார்ப்பை விதைத்தது.

Roja Kootam movie special article

சண்டைக்காட்சிகளிலும் நடனத்திலும் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டிருப்பதே நல்லதொரு நாயகனுக்கான இலக்கணம் என்றிருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘ரோஜாக் கூட்டம்’ படத்தில் பூர்த்தி செய்தார் ஸ்ரீகாந்த். அந்த வகையில் இது அவருக்கான நல்லதொரு அறிமுகமாக அமைந்தது.

அவரது இரண்டாவது படமான ‘ஏப்ரல் மாதத்தில்’ மீண்டுமொரு காதல் படமாக அமைந்து அதனைப் பெரிதாக்கியது.

தொடர்ந்து ‘மனசெல்லாம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘சதுரங்கம்’ என்று வேறுபட்ட கதைகளைத் தேடித் தேடி நடிக்கத் தொடங்கிய ஸ்ரீகாந்த், ஆக்‌ஷன் கதைகளுக்குத் தடம் புரண்டபோதே சரிவைச் சந்தித்தார். அதனைச் சரி செய்யும் முயற்சியில் தெலுங்கு படங்களிலும், தற்போது மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் மிளிர்கிறார். ‘மிருகா’, ‘பிண்டம்’ போன்ற படங்கள் அவரை மீண்டும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன.

Roja Kootam movie special article

கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் ஆனபிறகும் ஸ்ரீகாந்தின் தோற்றத்தில் பெரிதாக மாற்றமில்லை என்பது ஆச்சர்யம் தரும் விஷயம். அதில் அவர் காட்டிவரும் உறுதியே, இன்றும் நாயக பாத்திரங்களில் அவரைப் பொருத்திப் பார்ப்பதில் இருக்கும் தயக்கங்களை உடைக்கிறது.

நினைவில் நிற்கும்!

ஏற்கனவே சொன்னது போல, ஒரு திரைப்படம் என்பது ஏதோ ஒரு வகையில் நம் தனிப்பட்ட வாழ்வனுபவங்களோடு தொடர்பு கொண்டிருக்கும். அது தரும் மனக்கிளர்ச்சி, அந்த காலகட்டத்தில் வாழ்வை எதிர்கொள்வதில் புது வெளிச்சத்தைக் காட்டியிருக்கும். நம்மில் அதிசயங்களை நிகழ்த்திய தேவதை தன் சிறகுகளை உதிர்த்துவிட்டு பூமிப்பந்தில் நடை பயில்வதை நேரில் காண்பது போல, நாளடைவில் அந்த நினைவுகள் மனதோரம் எஞ்சியிருக்கும். ‘ரோஜாக் கூட்டம்’ திரைப்படம் அப்படி எத்தனையோ பேரின் நினைவுகளில் குடி கொண்டிருக்கிறது இருபத்திரண்டு ஆண்டுகளாக..!

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கரும்புக்கான கொள்முதல் விலை உயர்வு: அண்ணாமலை வரவேற்பு!

கர்நாடகாவில் சிகரெட் விற்பனைக்குக் கட்டுப்பாடு:  ஹூக்கா பார்களுக்கு தடை! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share