தோனி, கோலியுடன் புதிய சாதனை பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா

Published On:

| By Kavi

2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22 துவங்கி, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பல அதிரடி ஆட்டங்களுடன் தொடர்ந்து வருகிறது.

இந்த தொடரில், தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ், கடைசி வரை போராடியும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த தொடரின் தனது 2வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று (மார்ச் 27) சன்ரைசர்ஸ்  ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கிய ரோகித் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்காக தனது 200ஆவது போட்டியில் விளையாடுகிறார்.

2011 ஐபிஎல் தொடரில், மும்பை அணிக்காக முதன்முதலாக களமிறங்கிய ரோகித் சர்மா, தொடர்ந்து 14 ஆண்டுகளாக அந்த அணிக்காக விளையாடி வருகிறார். இந்த 14 ஆண்டுகள் பயணத்தில், அணியின் ஒரு வீரராக வந்த ரோகித் சர்மா, பின் கேப்டனாக உயர்ந்து, அந்த அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அவரின் இந்த சாதனையை போற்றும் வகையில், போட்டிக்கு முன்னதாக, 200 என அச்சிடப்பட்ட சிறப்பு மும்பை இந்தியன்ஸ் ஜெர்ஸி ஒன்றை சச்சின் டெண்டுல்கர் ரோகித் சர்மாவுக்கு பரிசாக வழங்கினார்.

https://twitter.com/IPL/status/1772977629705957431/

ஐபிஎல் வரலாற்றில், இந்த சிறப்புமிக்க சாதனையை எட்டும்  3வது வீரர் ரோகித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனியும் மட்டுமே, ஒரே அணிக்காக 200க்கும் மேற்பட்ட ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

இதில், மேலும் ஒரு சுவாரஸ்யமான விஷயமாக, மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாடிய 100வது போட்டியிலும், அந்த அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராகவே மோதியது.

இந்த போட்டிக்கு முன்னதாக, இதுவரை ஐபிஎல் தொடர்களில் 6,254 ரன்களை விளாசியுள்ள ரோகித் சர்மா, அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும் 5,084 ரன்களை குவித்துள்ளார். அவற்றுள் 1 சதம், 34 அரைசதங்கள் அடக்கம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– மகிழ்

தேர்தலில் போட்டியிட பணம் இல்லை : நிர்மலா சீதாராமன்

Game Changer : முதல் பாடலே பிரம்மாண்டம்…! ராம் சரண் – கியாரா செம டான்ஸ்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share