உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தவமாய் தவம் கிடக்கும் ஒரு கேம் ‘ஜிடிஏ 6’ (Grand Theft Auto VI). பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக நவம்பர் 19, 2026 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தேதி வரை தான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று தெரிந்த ஒரு ரசிகர், இறப்பதற்கு முன் அந்த கேமை விளையாட ஆசைப்பட்டார். அவரின் அந்த நெகிழ்ச்சியான ஆசையைத் தயாரிப்பு நிறுவனம் நிறைவேற்றியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
யார் அந்த ரசிகர்? கனடாவைச் சேர்ந்த ‘யூபிசாஃப்ட்’ (Ubisoft) நிறுவனத்தின் டெவலப்பரான ஆண்டனி ஆம்ஸ்ட்ராங் (Anthony Armstrong), சமீபத்தில் லிங்க்ட்இன் (LinkedIn) தளத்தில் ஒரு உருக்கமான பதிவைப் போட்டிருந்தார். அதில், “என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பல ஆண்டுகளாகப் புற்றுநோயுடன் போராடி வருகிறார். அவருக்கு இன்னும் 6 முதல் 12 மாதங்கள் மட்டுமே காலக்கெடு என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். தீவிரமான ஜிடிஏ ரசிகரான அவர், கேம் வெளியாகும் வரை உயிருடன் இருப்பாரா என்பது சந்தேகமே. ராக்ஸ்டார் நிறுவனம் நினைத்தால், அவருக்கு மட்டும் பிரத்யேகமாக இந்த கேமை விளையாட அனுமதிக்க முடியுமா?” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
வைரலான கோரிக்கை: இந்த பதிவு சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவியது. கேமிங் உலகம் முழுவதும், “தயவுசெய்து இவருக்கு உதவுங்கள்” என்று ராக்ஸ்டார் கேம்ஸ் (Rockstar Games) நிறுவனத்தை வலியுறுத்தியது. இந்தச் செய்தி ராக்ஸ்டார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘டேக்-டூ’ (Take-Two Interactive) சி.இ.ஓ ஸ்ட்ராஸ் ஜெல்னிக்கின் (Strauss Zelnick) கவனத்திற்கும் சென்றது.
நிறைவேறிய ஆசை: ரசிகர்களின் அன்புக்கும், அந்த நோயாளியின் நிலைக்கும் மதிப்பளித்து ராக்ஸ்டார் நிறுவனம் உடனடியாகப் பதிலளித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் வெளியிட்ட அடுத்த பதிவில், “எங்களுக்குச் சிறந்த செய்தி (Great News) கிடைத்துள்ளது. ராக்ஸ்டார் மற்றும் டேக்-டூ நிறுவனத்திற்கு நன்றி,” என்று குறிப்பிட்டிருந்தார். ரகசியக் காப்பு ஒப்பந்தம் (NDA) காரணமாக அவரால் முழு விவரங்களையும் சொல்ல முடியாவிட்டாலும், அந்த ரசிகருக்கு ஜிடிஏ 6-ஐ முன்கூட்டியே விளையாடும் வாய்ப்பு (Early Access) வழங்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
மனிதாபிமானம் வென்றது: பொதுவாக ராக்ஸ்டார் நிறுவனம், கேம் வெளியாகும் முன் எந்தத் தகவலையும் கசிய விடாது. மிகவும் ரகசியமாகச் செயல்படும் நிறுவனம் அது. ஆனால், விதிகளையும் தாண்டி ஒரு ரசிகரின் கடைசி ஆசைக்காக அவர்கள் இறங்கி வந்தது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. ஏற்கனவே 2018-ல் ‘ரெட் டெட் ரிடம்ப்ஷன் 2’ (Red Dead Redemption 2) கேமை, இதேபோல் ஒரு நோயாளிக்கு வெளியீட்டிற்கு முன்பே விளையாடக் கொடுத்த வரலாறு ராக்ஸ்டாருக்கு உண்டு.
கேம்கள் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது உணர்வுகளோடு கலந்தது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.
