வாக்கிங் செல்லும் இடங்களில், வாழைத்தண்டு சாறு, அறுகம்புல் ஜூஸ், முள்ளங்கி ஜூஸ், கற்றாழை ஜூஸ், கீரை சூப் என இயற்கை பானங்களை விற்பனை செய்யும் பல கடைகளைப் பார்க்கிறோம்.
இயற்கையான மூலிகைகளிலிருந்தும் உணவுப் பொருட்களிலிருந்தும் தயாரிக்கப்பட்ட பானங்கள் ஆரோக்கியமானவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன.
உதாரணத்துக்கு, கப உடல் தன்மை கொண்டவர்கள் குளிர், பனி நாட்களில் கற்றாழை பானங்களைப் பருகினால், கபம் அதிகரித்து கப நோய்கள் வரலாம்.
24 மணி நேரமும் குளிர் சூழ் அறைகளில் தொடர்ந்து பணிபுரியும் நபர்களுக்கும் அவை ஏற்றுக் கொள்ளாது. கற்றாழை பானத்தை கோடைக்காலங்களில் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
வாழைத்தண்டு சாறு, கோடைக்காலங்களில் உண்டாகும் சிறுநீர் எரிச்சலைக் குறைக்கப் பேருதவி புரியும். வாழைத்தண்டு சாறு சிறுநீரக உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கவும், சிறுநீரக கற்களை வெளியேற்றவும் உதவும்.
அறுகம்புல் சாற்றுக்கோ கழிவுகளை வெளியேற்றும் தன்மை இருக்கிறது. முள்ளங்கி சாறும் சிறுநீரை வெளியேற்றி பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும்.
பாகற்காய் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும் உணவுப் பொருள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதற்காகப் பாகற்காய் சாற்றை மட்டும் குடித்தால் ரத்தச் சர்க்கரை கட்டுக்குள் வரும் என்ற தவறான எண்ணத்தில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான வாழ்வியல் முறைகளையோ, உணவியல் முறைகளையோ கடைப் பிடிக்காமல் இருப்பது நல்லதல்ல.
நடைப்பயிற்சி செய்யாமல், இயற்கை பானங்களைப் பருகுவதற்காக மட்டும் மைதானங்களுக்குச் செல்வோர் பலர். பானங்களின் நன்மைகள் நிச்சயம் கிடைக்கும். ஆனால், பானங்களால் மட்டுமே உடல் எடை குறையாது. உடல் உழைப்பும் முக்கியம்.
இன்னும் சிலர் தீவிரமாக நடைப்பயிற்சி செய்த பின்பு ஏற்படும் பசியைப் போக்க, கடைகளில் உள்ள சமோசா, போண்டா, பஜ்ஜி போன்ற நொறுக்குத்தீனிகளை எடுத்துக் கொள்வதை பார்க்க முடியும்.
நடைப்பயிற்சியால் கிடைத்த பலன்கள் அனைத்தும் இப்படிச் சாப்பிடப்படும் எண்ணெய்ப் பலகாரங்களால் சில நிமிடங்களில் காணாமல் போகும்.
இயற்கை பானங்களைத் தயாரிப்பவர்கள், குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைகளைத்தான் பயன்படுத்துகின்றனரா என்பதையும் அறிந்துகொள்வது முக்கியம். உதாரணத்துக்கு ‘முடக்கறுத்தான் சூப்பில்’ முடக்கறுத்தான்தான் அங்கம் வகிக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
மொத்தத்தில்… நடைப்பயிற்சி செய்யும் இடங்களில் விற்பனை செய்யப்படும் இயற்கை பானங்களைத் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், எதற்காக எடுக்கிறோம்… காலச்சூழல் என்ன… உடலுக்கான தேவை என்ன ஆகிய விஷயங்களைப் புரிந்துகொண்டு குடிப்பதே சிறந்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: மற்றவர்களிடமிருந்து விலக வைக்கும் வாய் துர்நாற்றம்… தீர்வு என்ன?
’தமிழ் மொழிக்கு உலக அங்கீகாரம்’ : நெல்லையில் மோடி வாக்குறுதி!
கெஜ்ரிவால் மேல்முறையீடு : ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
பியூட்டி டிப்ஸ்: கால்களை பாதிக்கும் பாத வெடிப்பும் எளிய தீர்வுகளும்!