சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன் விழாவுடன் ‘இந்தி மாதம்’ கொண்டாட்டத்தின் நிறைவு விழாவும் இன்று (அக்டோபர் 18) கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் அரங்கம்-1 இல் இன்று மாலை 4 முதல் 5 மணி வரை நடந்த சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவும் அதனுடன் சேர்த்து இந்தி மாதக் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவும் கொண்டாடப்பட்டது.
இதில் உரையாற்றிய ஆளுநர் ரவி பேசுகையில் “கடந்த 3 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளுக்குச் சென்ற நான், பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் உரையாடி இருக்கிறேன்.
அப்பொழுது, தமிழக மக்களிடம் இந்தி கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துவருவதை நான் கண்டேன். தமிழ்நாட்டிற்கு முதன் முதலில் வந்த பொழுது, தமிழ்நாட்டில் இந்திக்கு வரவேற்பு இருக்காது என்று எனக்குச் சொல்லப்பட்டது.
ஆனால் தமிழக மாணவர்களிடம் நான் உரையாடிய போது, என்னை விட சுத்தமான இந்தியில் சில மாணவர்கள் என்னிடம் உரையாடினார்கள். சொல்லப் போனால் எனக்கு அதனால் தாழ்வு மனப்பான்மையும் வந்தது. தமிழக மக்களிடம் இந்தி மொழிக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
யார் மீதும் இந்தி மொழி திணிக்கப்படுவதில்லை. சொல்லப்போனால் பாரதத்தின் ஒவ்வொரு மொழியும் நமது தேசிய மொழிதான். அனைத்து பாரத மொழியும் நாம் கொண்டாட வேண்டும் மற்றும் அவைகளை நினைத்து நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும்.
கடந்த 50 வருடங்களாகத் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து தனிமைப்படுத்துவதற்கான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன. இதற்காகத்தான் இந்திக்கு எதிரான போராட்டங்கள் பயன்படுத்தப்பட்டன” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது, “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரி பாடப்படவில்லை. இந்த நிலையில் ஆளுனர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தமிழ்த்தாய் வாழ்த்தில் தவிர்க்கப்பட்டதா திராவிடம்? – அடுத்த சர்ச்சையில் ஆளுநர்
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!
வீரப்பன் நினைவு நாள்… 20 ஆண்டுகளில் மலைப்பகுதிகளில் நடந்த மாற்றம்!