பிளாக் ஷீப் டிஜிட்டல் சேனலின் நிறுவனரும் நடிகருமான ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், தொடர்ந்து 50 மணி நேரம் ரஜினியை குறித்து பாட்காஸ்ட் பேசி உலக சாதனை படைத்துள்ளார்.
தமிழ் டிஜிட்டல் உலகின் எழுச்சியில் பெரிய பங்காக இருந்த யூடியூப் சேனல்களில் மிக முக்கியமான நிறுவனம் ‘ பிளாக் ஷீப் . மீடியா துறையில் சாதனை படைக்க வேண்டும் என ஒரு இளைஞர் குழுவால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது வரை நூற்றுக்கணக்கான இளைஞர்களின் மீடியா கனவை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக சமூக ஊடகத்திற்கும் பாரம்பரிய ஊடகத்திற்குமான இடைவெளியை இணைத்த பாலமாக ‘ பிளாக் ஷீப் ‘ இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
‘ ஸ்மைல் வெப் ரேடியோ ‘ , ‘ ஸ்மைல் சேட்டை ‘ , ‘ பிளாக் ஷீப் ‘ , ‘ பி.எஸ் வால்யூ ஓடிடி ‘ எனப் பல்வேறு பரிணாமங்களைக் கடந்து வந்திருந்தாலும் ‘ பிளாக் ஷீப் ‘ குழுவின் புதுமையும் , இளமையும் என்றும் மாறியதில்லை. குறிப்பாக , புதுமைக்குள் தமிழின் பாரம்பரிய ஊடக வடிவான மேடை நாடகத்தை ‘ நவயுக ரத்தக் கண்ணீர் ‘ மூலம் கொண்டு வந்தது நிச்சயம் பாராட்ட வேண்டியதே.
தற்கால டிஜிட்டல் உலகின் வளர்ந்து வரும் ஒரு ஊடக வடிவம் ‘ பாட்காஸ்ட்’ . ஒரு குறிப்பிட்ட தலைப்பு குறித்து பல மணி நேரம் பேசி ஒலி வடிவில் வெளியிடுவதே பாட்காஸ்ட். மேற்கத்திய நாடுகளில் பிரபலமாகி வந்த இந்த ஒலி வடிவு ஊடகம் தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது பிளாக் ஷீப் நிறுவனரும், நடிகருமான ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் தற்போது ‘ பாட்காஸ்ட் ‘ ஊடக வடிவில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
‘ சூப்பர் ஸ்டாருக்கு சல்யூட் ‘ என்கிற பெயரில் தொடர்ந்து 50 மணி நேரம் நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரையுலக வாழ்க்கை குறித்து பாட்காஸ்டில் பேசி அந்த ஊடக வடிவில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள ஆம்பா ஸ்கை வால்க் மாலில் தொடங்கிய இந்த நிகழ்வு , இன்று ( செப்டம்பர் 8 ) மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. சுமார் இரண்டு நாட்களாக தொடர்ந்து நிகழ்ந்த இந்த பாட்காஸ்ட் மாரத்தானில் இயக்குநர் த.ச.ஞானவேல் , இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இயக்குநர் லிங்குசாமி உட்பட 60 க்கும் மேற்பட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் பேசிய ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், ” இது பிளாக் ஷீப்பின் அடுத்த கட்ட பாய்ச்சல் தொடக்கமாக அமையும். இனி பல்வேறு பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை தயாரிக்க உள்ளோம் ” எனத் தெரிவித்தார்.
இந்த சாதனை முயற்சியை ‘ வார்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் ‘ அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. பாட்காஸ்ட் வடிவில் இந்த சாதனை மிகப் பெரிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. மேலும், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் 11 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் குறித்து 12 மணி நேரம் பேசி உலக சாதனை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
69% இட ஒதுக்கீடு… திமுக அரசு மீது தொங்கும் கத்தி! அன்புமணி பகீர்!
‘விடாமுயற்சி’ ரிலீஸ்: மகிழ்திருமேனி டிமாண்ட்… முரண்டு பிடிக்கும் லைகா!