ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சொர்கவாசல்’ ; கதை இது தானா..?

Published On:

| By Kavi

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சொர்கவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று(அக்டோபர் 19) இயக்குநர் ரஞ்சித் வெளியிட்டார்.

போஸ்டரின் பேக்ரவுண்டில் விண்ணுக்குச் செல்லும் படிக்கட்டுகள், ஆங்காங்கே சிறை உடைகளில் சில கதாபாத்திரங்கள், கைதியாக கையில் ஸ்லேட்டுடன் ஆர்.ஜே.பாலாஜி என படத்தின் கதை குறித்த சில குறியீடுகளை இந்த போஸ்டரில் பார்க்க முடிந்தது.

1999ஆம் ஆண்டில் நடக்கும் இந்தக் கதையில், குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, சிறையில் இருந்து தப்பிக்க நினைக்கிறார். அவர் எந்த குற்றத்திற்காக சிறையில் உள்ளார்? அவர் ஏன் தப்பிக்க வேண்டும்? எப்படி தப்பிப்பார்? போன்றவைகளை சுற்றி இந்தப் படத்தின் கதை நகரும் என அனுமானிக்க முடிகிறது.

வெகு நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தைப் பெற்ற நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்தப் படம் குறித்து வெளியிட்ட போஸ்டரிலும், ‘ இந்த ஜெயில் பிரேக்கை எந்தக் கதவும் தடுக்க முடியாது. சொர்க்க வாசலை உடைத்து உங்களைக் காண ஆர்.ஜே.பாலாஜி வருவார்’ என்கிற கேப்சனைப் பதிவிட்டிருந்தது நினைவிருக்கும்.

ஆக, நிச்சயம் இந்தத் திரைப்படம் ஜெயில் பிரேக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையில் தான் அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஆர்.ஜே.பாலாஜியின் இந்தப் பரிமாணம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் உடன் இணைந்து எழுத்தாளர் தமிழ் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகியோரும் எழுதியுள்ளனர்.

இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், டீசர், டிரெய்லர் அப்டேட் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தெரிகிறது.

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

– ஷா

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா Vs நவ்யா… வேட்பாளரை அறிவித்த பாஜக

காதலர்களுக்கு இப்படி ஒரு சோதனையா? – அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share