‘ரௌத்திரம்’, ’இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ’காஷ்மோரா’, ’ஜூங்கா’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் கோகுல். தற்போது இவரது இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள படம் ’சிங்கப்பூர் சலூன்’.
இந்த படத்தில் சத்யராஜ், லால், மீனாட்சி சவுத்ரி, தலைவாசல் விஜய், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா ஆகிய இருவரும் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 18) சிங்கப்பூர் சலூன் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.
#SingaporeSaloon trailer ❤️https://t.co/JnBdD9PXmR pic.twitter.com/NFGdOAuH5C
— RJ Balaji (@RJ_Balaji) January 18, 2024
இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தாலும் முடிதிருத்தும் நிபுணராக வேண்டும் என்ற ஆசையில் அந்த வேலையை உதறிவிட்டு அவரது கனவை நோக்கி செல்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. முடி திருத்தும் நிபுணராக வேண்டும் என்று ஆர்.ஜே.பாலாஜி முயற்சி செய்யும்போது அவருக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுகிறது. அதை அவர் எப்படி சமாளித்தார், இறுதியாக தனது லட்சியத்தை அடைந்தாரா இல்லையா என்பதே சிங்கப்பூர் சலூன் படத்தின் கதை. காமெடி, சென்டிமென்ட், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைவரும் ரசிக்கும் வகையில் ஒரு ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக தான் இந்த படம் உருவாகி இருக்கிறது.

இந்த டிரைலரில் “முடி வெட்டுறது எல்லாம் குலத் தொழில்.. நமக்கு எப்படி செட் ஆகும்?” என்று தலைவாசல் விஜய் கேட்கும் கேள்விக்கு, “இன்ஜினியரிங் மட்டும் நம்ம குலத் தொழிலா?” என்று ஆர்.ஜே.பாலாஜி கேட்கும் வசனம் கவனிக்க வைக்கிறது.
வரும் ஜனவரி 25 ஆம் தேதி சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
