நயன்தாரா நடித்துவரும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த தர்பார் திரைப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் அவர் நடித்துவருகிறார். இந்தத் திரைப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக வளர்ந்த நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இந்தத் திரைப்படத்திற்காக கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அத்துடன் இயக்குநர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இந்தப்படத்தை இயக்கியும் வருகிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரி மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அந்த நேரத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களிலும் நயன்தாரா தரிசனம் செய்து வந்தார். இது குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகிவந்தது. இந்த நிலையில் இன்னும் 10 சதவீத படப்பிடிப்பு மட்டும் மீதமுள்ளதாக, ஆர்.ஜே.பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
And thats the schedule wrap .!????
44 days of non-stop shoot of #MookuthiAmman .!???? With that we complete 90 percent of the film .! Thank you God, people of Kanyakumari district, my amazing team and The brilliant Nayanthara for this memorable shoot.!????#Summer2020 here we come.!!!❤️ pic.twitter.com/uIyXNEYa94— RJ Balaji (@RJ_Balaji) January 11, 2020
படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, ‘44 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நடைபெற்றது. 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மறக்கமுடியாத படப்பிடிப்பு அனுபவத்தைத் தந்த கடவுளுக்கும், கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கும், திறமையான நயன்தாராவிற்கும் நன்றிகள்’ என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஊர்வசி, இந்துஜா போன்றவர்களும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
மேலும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே கோடை விடுமுறையைக் குறிவைத்து விஜய் நடித்துள்ள மாஸ்டர், சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ திரைப்படங்கள் வெளிவரவுள்ள நிலையில், அவற்றுடன் மூக்குத்தி அம்மன் திரைப்படம் நேரடியாக மோதவுள்ளது.
