திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாமியார் சித்ராதேவி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். Rithanya
அவிநாசியில் திருமணமான 78 நாட்களிலேயே புதுமணப் பெண் ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக தந்தைக்கு ரிதன்யா அனுப்பிய ஆடியோ, அவரது கணவர் வீட்டாரின் வரதட்சணை கொடுமையை அம்பலப்படுத்தியது.
ரிதன்யா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அவரது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது, ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே ரிதன்யாவின் கணவர், மாமனார் ஆகியோர் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதற்கு ரிதன்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில், கணவர் கவின் குமார் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால் இந்த வழக்கின் விசாரணை வரும் 7-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.