இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் SIR-ல் பழங்குடி வாக்காளர்கள் கணிசமாக நீக்கப்பட வாய்ப்புள்ளது என உச்சநீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆதித்யா சொந்தி வாதிட்டார்.
SIR-க்கு எதிராக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தொடர்ந்த வழக்கில் ஆதித்யா சொந்தி முன்வைத்த வாதம்: அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 21(3)ன் கீழ் உள்ள தேவைகள், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் (qua the Constitution) விளக்கப்பட வேண்டும்.
‘தேர்தல் தொகுதி’ என்பது ஒன்றுக்கு மேற்பட்டதாகவும் பொருள் கொள்ளப்படலாம். ஆனால் காரணங்களை ஒதுக்கி விளக்கும் (assignment of reasons) சூழலில், அது அந்தந்த தேர்தல் தொகுதியை அடிப்படையாகக் கொண்டு (qua the constituency) விளக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் நிலையை எடுத்துக்கொண்டால், 37 மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் பழங்குடியினர் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் இடம்பெயரும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இந்தியாவுக்குள்ளேயே வேலைக்காக இடம்பெயர்கிறார்கள்.
அவர்கள் கேரளாவுக்குச் சென்று சபரிமலையில் வேலை செய்துவிட்டு , சீசன் முடிந்ததும் திரும்பி வருகிறார்கள்.
27.10.2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு, போதுமான காரணங்களின்றி (bereft of reasons) வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு செயலை மேற்கொள்ள வேண்டிய முறை (methodology) குறிப்பிட்ட விதத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட முறை தவிர மற்ற அனைத்து வழிமுறைகளும் தன்னிச்சையாகவே விலக்கப்படுகின்றன.
ஒரு நடுநிலையான அல்லது பொதுவான அறிவிப்பை மேலோட்டமாகப் பார்த்தால் அது நடுநிலையாகத் தோன்றினாலும், அதன் விளைவாக ஓரங்கட்டப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட மக்களை பாதிப்பதாக இருந்தால், அது அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 14-க்கு முரணானதாக (fall foul of Article 14) அமையும்.
அடித்தள நிலைகளில் (grassroot levels) எஸ்.ஐ.ஆரை முன்னெடுக்க உள்ளூர் அஞ்சல் ஊழியர்கள் (postmen / postwomen) நியமிக்கப்பட வேண்டும் என்ற தாமஸ் கமிஷனின் பரிந்துரைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவை மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
இந்த செயல்முறையின் மறைமுகமான மற்றும் சூழ்ச்சியான விளைவு, தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினரை (Scheduled Tribes)— வாக்காளர் பட்டியலிலிருந்து விலக்கி விடுவதாகும்.
EROs வாக்காளர் பட்டியலில் ஒருவர் இடம்பெறுகிறாரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறை ஒருவரது குடியுரிமையைத் தீர்மானிக்கும் நிலைக்குச் செல்கிறது , அது அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 14-க்கு முரணாகவும், ஆதார் தொடர்பான தீர்ப்புக்கு எதிராகவும் இருப்பதால், இந்த நடவடிக்கை செல்லாது என நீதிபதிகள் அறிவிக்க வேண்டும் . இவ்வாறு ஆதித்யா சொந்தி வாதிட்டார்.
