சேலம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ச்சியாக நகை, பணம் திருட்டு, ஹவாலா பண பரிமாற்றம் உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் குற்ற சம்பவங்களை தடுக்க இன்னும் ஓரிரு நாட்களில் புதிதாக எட்டிமடை பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்படும் என கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். Crime Coimbatore
இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைகளில் சேலம் -கொச்சி தேசிய நெஞ்சாலையும் ஒன்று. கர்நாடகா, தமிழகம் கேரளத்தை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தை இணைக்கும் நெடுஞ்சாலை என்பதால் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த சாலையில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. சில நேரங்களில் ஹலாலா பணம் பரிமாற்றம் இந்த சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
ஹவாலா பணம் பறிமுதல்
சமீபத்தில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட வாளையார் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான கலால் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து கொச்சி செல்லும் தனியார் பேருந்தை நிறுத்தி ஆய்வு செய்த போது மகாராஷ்டிராவை சேர்ந்த கணபதி அசோக் ஜாதவ் என்பவரின் பையில் 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.48 லட்சம் ஹவாலா பணத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பணத்தை கைப்பற்றிய காவல்துறையினர் அவரை கைது செய்தனர்
நகை, தங்கம் கொள்ளை
இதேபோல் கடந்த மாதம் கோவையில் இருந்து கேரளா சென்ற நகை கடை வியாபாரியை தாக்கி ரூ.1 1/4 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த வாரம் நகைக்கடை ஊழியரை தாக்கி ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுபோன்று சேலம் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்த சாலையில் பயணம் செய்வதற்கு அச்சப்படும் சூழல் உருவாகி வருகிறது. இந்நிலையில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த சேலம் கொச்சி சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எட்டிமடை பகுதியில் சோதனை சாவடி
இது தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறியதாவது, சேலம் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் எட்டிமடை பகுதியில் சாலை ஓரத்தில் சோதனை சாவடி அமைக்கப்பட உள்ளது. 24 மணி நேரமும் அங்கு 4 போலீசார் பணியில் இருப்பர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்படும் என்றார். எட்டிமடை சோதனை சாவடியில் இருந்து வாளையாறு சோதனை சாவடிக்கும், வேலந்தாவளம் சோதனை சாவடிக்கும் அங்கிருந்து ஈச்சனாரி அருகில் உள்ள கல்லூரி பிரிவுக்கும் 24 மணி நேரமும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
சிறப்பு படை
இந்த ரோந்து பணியை கண்காணிக்க சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு சிறப்பு படை அமைக்கப்படும் என்று என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த ரோட்டில் செல்பவர்களிடம் வழிப்பறி, திருட்டு நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. சம்பவம் நடந்த உடன் தகவல் தரும் பட்சத்தில் உடனடியாக கண்காணிப்பை தீவிர படுத்தி குற்றவாளிகளை பிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் இந்த நடவடிக்கை சேலம் கொச்சி நெடுஞ்சாலைகளில் குற்றச்சம்பவங்களை குறைக்க உதவுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
